திருக்கனுார் : மாணவர்கள் படிப்புடன் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தியுள்ளார்.
திருக்கனுார் அடுத்த வாதானுார் சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில், நான்காம் வட்டம் அளவிலான இரண்டு நாள் கபடி போட்டி துவக்க விழா நேற்று நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், காலாப்பட்டு சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் சரவணன் வரவேற்றார். முதன்மை கல்வி அதிகாரி தனச்செல்வன் நேரு கபடி போட்டியை துவக்கி வைத்தார். 4ம் வட்டம் விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் போட்டிகளை ஒருங்கிணைத்தார். உடற்கல்வி ஆசிரியர் சுதந்திரம் நன்றி கூறினார்.
இப்போட்டியில் 4ம் வட்டம் அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்டன.
விழாவில் சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேசுகையில், சமீப காலமாக 18 முதல் 20 வயது உடையவர்கள் அதிக அளவில் சிறைக்கு வருவது வேதனையாக உள்ளது. ஆகையால் மாணவர்கள் பள்ளியிலேயே படிப்புடன் ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
வட மாநில மாணவர்கள் ஆங்கிலத்தை விட தாய் மொழியில் தான் அதிகம் பேசுகின்றனர். ஆனால், நமது பகுதியில் உள்ள மாணவர்கள்தான் தமிழில் பேச தயக்கம் காட்டுகின்றனர். மாணவர்கள் தாய்மொழியான தமிழில் பேசும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.