கடலுார் : 'மாண்டஸ்' புயல் எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலுார் மாவட்டத்திற்கு 28 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு வந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வலுப்பெற்று புயலாக மாற உள்ளது. அந்த புயலுக்கு 'மாண்டாஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, கடலுார் உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடலுார் மாவட்டம் ஒவ்வொரு புயல் மழையின்போதும் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மீட்பு பணிக்காக, அரக்கோணத்தில் இருந்து, 28 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று மாலை கடலுார் வந்தனர். மீட்பு உபகரணங்களுடன் முகாமிட்டுள்ள, அவர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை கடலுார் மாவட்டம் முழுவதும் பரவலாக கொட்டி தீர்த்தது. பல இடங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. வயல்கள் வெள்ளக்காடாக மாறியது. வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் சூழ்நிலையில், மீண்டும் கன மழை எச்சரிக்கையால் கடலுார் மாவட்ட மக்கள் கவலை அடைந்துள்ளனர்.