சிதம்பரம் : சிதம்பரம் அருகே, புதியதாக போடப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ., துாரத்திற்கு, ரூ.8 ஆயிரம் கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) இப்பணியை மேற்கொண்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61, நாகப்பட்டினத்தில் 43, புதுச்சேரி மாநிலத்தில் 14 என, 134 கிராமங்கள் வழியாக இச்சாலை அமைக்கப்படுகிறது.
இப்பணிக்கு 2012ல் ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், கோர்ட்டில் தடை, நில ஆர்ஜித பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 2021ம் ஆண்டில் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க நான்கு பிரிவாக பணிகள் நடந்து வருகிறது.
இத்திட்டத்தில், இருவழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக தரம் உயர்த்தியும், புதிய புறவழிச் சாலைகள், மேம்பாலங்கள், தரைவழிப் பாலங்கள், அணுகு சாலைகள் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
கடலுார் மாவட்டம் கீழ்பூவாணிக்குப்பத்தில் இருந்து மயிலாதுறை மாவட்டம் சட்டநாதபுரம் வரை நடந்துவரும் பணிகள், பிற பகுதிகளைவிட துரிதமாக நடக்கிறது. ஆனால், கடலுார்- சிதம்பரம் இடையிலான நான்கு வழிச்சாலை பணியில், முறையான திட்டமிடல் இன்றி மாற்றுப்பாதை அமைக்கப்படாததால், வாகன ஒட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழை பெய்துவிட்டால் இணைப்பு சாலைகள் குண்டும் குழியுமாக மாறி, வாகனங்கள் பள்ளம் மேடு தெரியாமல் தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றன. கடலுாரில் இருந்து சிதம்பரத்தை 50 நிமிடங்களில் கடந்துவிடும் நிலையில், தற்போது, ஒன்னரை மணி நேரம் ஆகிறது.
மேலும் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் போராட வேண்டியுள்ளது.
இந்நிலையில், சிதம்பரத்தில் இருந்து கடலுார் செல்லும் வழியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலையில் பல இடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தில் ரசாயனம் கலந்த சிமென்ட் சாலையாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலையில் திடீர் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது, பணிகள் தரமாக நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம்- நாகைப்பட்டினம் நான்கு வழிச்சாலை திட்ட இயக்குனர் சக்திவேல் கூறுகையில், 'கடலுார் சாலையில் ஒரு சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டதால், சாலை ஒரு பக்கம் அழுந்தி, விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் அருகே சர்வீஸ் ரோடு போட்டு முடிந்த பிறகு, விரிசல் பகுதி முழுவதையும் அப்புறப்படுத்திவிட்டு, புதிய சாலை அமைக்கப்படும்' என, தெரிவித்தார்.