மாமல்லபுரம் : 'துாய்மையான சமூகங்களின் மூலம் துாய்மையான கடல்கள்' குறித்து, மாமல்லபுரத்தில், நேற்று பயிலரங்கம் துவக்கப்பட்டது.
ேஹன்ட் இன் ேஹன்ட் இந்தியா தன்னார்வ நிறுவனம், ேஹன்ட் இன் ேஹன்ட் ஸ்வீடன் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து, மாமல்லபுரம் தனியார் விடுதியில், நேற்று பயிலரங்கை துவக்கியது.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், பயிலரங்கை துவக்கி பேசியதாவது:
மாமல்லபுரம், முக்கிய சுற்றுலா இடமாக விளங்குகிறது. இந்திய பாரம்பரிய நினைவுச் சின்னங்களில், முதலிடம் பிடித்துள்ளது. இங்கு அழகிய கடற்கரை உள்ளது.
தமிழகத்தின் முதல் சர்வதேச 'நீலக்கொடி' கடற்கரையாக, கோவளம் பெயர் பெற்றுள்ளது.
இத்தகைய பகுதிகள் துாய்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது. பல காரணங்களால், கடலிலும் குப்பை பெருகுகிறது.
இவற்றால், சுற்றுச்சூழல், சுகாதாரம், பொருளாதாரம், கலாச்சார தாக்கம் ஏற்படுகிறது.
பொருளாதார தாக்கத்தால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சுற்றுலாவும் பாதிக்கப்படும். கடலிலும், கடற்கரையிலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அதிகரிக்கின்றன.
இதை கட்டுப்படுத்த, சர்வதேச, தேசிய, வட்டார விதிமுறைகளை, முறையாக செயல்படுத்தாததும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததும், இத்தகைய நிலைமைக்கு காரணம்.
கடல் குப்பை, கழிவு மேலாண்மையில், பரந்த பிரச்னையாகவும், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கவலையாகவும் உள்ளது.
துாய்மை சூழலை அடைய, 'துாய்மையான சமூகங்கள் மூலம் துாய்மையான கடல்கள்' திட்டம், நார்வே வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவன நிதியில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இத்திட்ட இயக்குனர், நார்வே நாட்டின் 'அவ்பால் நார்ஜே' நிறுவனத்தைச் சேர்ந்த சிக்வே அந்தேரா, ேஹன்ட் இன் ேஹன்ட் நிறுவனத்தினர், மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளை வரை நடக்கும் பயிலரங்கில், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி ஆகிய நிர்வாகங்களின் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
திடக்கழிவு, கடல் குப்பை அகற்றம் உள்ளிட்ட மேலாண்மை குறித்து, பல பகுதிகளில், பயிலரங்க, கள பயிற்சிகள், ஓராண்டு அளிக்கப்பட உள்ளது.
இதன் மூலம், அந்தந்த பகுதிக்கு, உள்ளாட்சி நிர்வாகத்தினரே, கழிவு மேலாண்மைக்கு திட்டம் வகுத்து, அரசிடம் பரிந்துரைக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.