சுற்றுலா மேம்பாடால், சுற்றுலா சார்ந்த பயணியர் விடுதி, கைவினை தொழில் நிறுவனங்கள், உணவகம் உள்ளிட்ட தொழில்கள் பெருகிஉள்ளன.
இத்தகைய சுற்றுலா சிறப்புமிக்க பகுதியில், விடுதிகள், வீடுகள் உள்ளிட்டவற்றில் வெளியேறும் கழிவு நீரால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
அதைக் கட்டுப்படுத்துவது, பேரூராட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருந்தது.
6.08 கோடி ரூபாய்
இதற்கு தீர்வு காண, தமிழக அரசு, இங்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, 2007ல் உத்தரவிட்டது.
மாமல்லபுரம் நகர்ப் பகுதியின், 1,163 வீடுகளுக்கு, திட்டத்தை செயல்படுத்த பேரூராட்சி நிர்வாகம்முடிவெடுத்தது.
மத்திய அரசின், ஜவஹர்லால் நேரு நகர மேம்பாட்டு கொள்கை திட்டத்தின்கீழ், அடிப்படை கட்டமைப்பு திட்டத்தில், 6.08 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, துறை நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது.
திட்ட மதிப்பீட்டுத் தொகையில், பேரூராட்சி நிர்வாகம் 10 சதவீத பங்களிப்பு நிதியாக, 60.80 லட்சம் ரூபாய் அளித்தது.
மத்திய அரசு, 63 சதவீத தொகையான 3 கோடியே 83 லட்சத்து 4,000 ரூபாயை மானியமாகவும், மீத தொகையான, 1 கோடியே 64 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடனாகவும் என, 5 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அளித்தது.
இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. வாரிய நிர்வாகம், அதே ஆண்டு இறுதியில் பணிகளை துவக்கியது.
ஒரு நாளில், 23.5 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கும் வகையில், பகிங்ஹாம் கால்வாய் அருகில் சுத்திகரிப்பு நிலையம், பல பகுதிகளில், பிரதான கழிவு நீரேற்று நிலையங்கள், துணை கழிவு நீர் உந்து நிலையங்கள், 8.82 கி.மீ., தொலைவிற்கு, நிலத்தடி கழிவு நீர் குழாய்கள், 340 ஆள் நுழைவு பகுதிகள், 15 மின் மோட்டார்கள் என, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அலட்சியம்
வாரிய நிர்வாகமோ, துவக்கம் முதலே அலட்சியமாக செயல்பட்டு, எட்டு ஆண்டுகளாக தாமதப்படுத்தியது. இதனால் பணிகள் முடிவடையாமல் பாதியில் நின்றன.
பணி முடியாததற்கு நிர்வாகக் குளறுபடிகளும், நிதி மேலாண்மையில் நடந்த ஊழலுமே கட்டுமானப் பணி தரமாக நடக்காததற்கு காரணமாகப் பார்க்கப்பட்டது.
அதன்பின், திட்ட மதிப்பீட்டுத் தொகை 8.72 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. பணிகள் வேகமெடுத்து, 2015ல் பணிகளை முடித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம், குடிநீர் வடிகால் வாரியம் ஒப்படைத்தது.
தற்போது, பேரூராட்சி நிர்வாகம், வர்த்தக பகுதி விடுதி, உணவகம், வசிப்பிடம் என, வகைக்கேற்ப வைப்புத்தொகை, மாத வாடகை நிர்ணயித்து, பாதாள சாக்கடை இணைப்பு வழங்குகிறது.
வீட்டிற்கு, 1,000 ச.அடி., வரை, 2,000 ரூபாய் முன் வைப்புத் தொகை, 75 ரூபாய் மாத கட்டணம்; அதற்கும் மேற்பட்ட பரப்பு அளவிற்கேற்ப, தொகை உயர்த்தி கட்டணம் பெறப்படுகிறது. விடுதிகளில், அறை எண்ணிக்கைக்கேற்ப கட்டணம் பெறப்படுகிறது.
பேரூராட்சிகள் இயக்குனரக அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி, தற்போது வரை, 780 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
விடுதிகளிலும், வீடுகளிலும் முறையான இணைப்பின்றி, அவற்றின் கழிவு நீர் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுகிறது.
வலியுறுத்தல்
நிலத்தடி புதை குழாய்கள், போதிய ஆழத்தில் புதைக்கப்படவில்லை. குழாயும் தரமாக இல்லை. இலக்கையே முழுமையாக அடையாத சூழலில், சாலை, தெரு பகுதிகளில், கழிவு நீர் குழாய்கள் உடைந்துள்ளன.
இச்சீர்கேடுகளால், கழிவு நீர், சாலையில் பெருக்கெடுத்து பாய்கிறது. துர்நாற்றம் வீசி, நோய் பரவும் அபாயம் உள்ளது.
அதிகமாக பயணியர் குவியும் ஒற்றைவாடை தெருவில், விடுதிகள், ரெஸ்டாரென்ட்டுகள் நிறைந்துள்ளன. அப்பகுதியிலும், இந்த அவலம் தொடர்கிறது.
பேரூராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்தி, அனைத்து இணைப்புகளையும் வழங்கி, கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பாதாள சாக்கடை திட்டத்தை, சரியாக திட்டமிட்டு செயல்படுத்தவில்லை. வீடுகள் உயரமான பகுதியில், தாழ்வானபகுதியில் உள்ளன.
சாலை பகுதியை ஒட்டி, சமதள பரப்பில் உள்ள விடுதி, வீடு ஆகியவற்றுக்கு, பாதாள சாக்கடை வழங்கப்பட்டுள்ளது. குறுகிய தெரு, தாழ்வான இடங்களில் உள்ளவற்றுக்கு, இணைப்பை வழங்க முடியாத நிலை உள்ளது.
குடிநீர் வாரியம், பேரூராட்சி நிர்வாகம் திட்டமிடாமல் செய்து, பல கோடி ரூபாய் வீணானது. ஆங்காங்கே கழிவு நீர் பெருக்கெடுத்து,சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
சுற்றுலா இடத்தில் ஏற்பட்டுள்ள இந்தஅவலத்தை, உயரதிகாரிகள் ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள், மாமல்லபுரம்.
மாமல்லபுரத்தில், நகரமாக உள்ள 10 வார்டுகளில் மட்டும், 8.72 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் அமைத்ததால், குழாய் உடைந்து, கழிவு நீர் வெளியேறுகிறது. இதைசரி செய்கிறோம்.
- வெ. கணேஷ், செயல் அலுவலர்,
மாமல்லபுரம் பேரூராட்சி.