கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., பள்ளியில், தெற்கு மண்டல அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
சென்னை ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை தென் மண்டல அளவிலான செஸ் போட்டி நடந்தது.
இதில், ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 609 பள்ளிகளை சேர்ந்த 5,250 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பயிலும் மாணவர்கள், 11 வயதிற்குட்பட்ட பிரிவில் மகன்யா, இளந்தமிழன், தீப்ஷிகா, ஜெகதீஷ் வாசுதேவ், முகேஷ் ஆகியோரும், 14 வயது பிரிவில் தான்யா, தக் ஷிதா, ரக் ஷிதா, ரத்தீஷ் ஆகியோரும் வெற்றி பெற்று முதல் 10 இடங்களை பிடித்தனர்.
மண்டல அளவில் ஜே.எஸ்., பள்ளி 18வது இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் செந்தில்குமார், முதல்வர் ஜெயலட்சுமி, துணை முதல்வர் பாபு ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கினர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.