விழுப்புரம், டிச.: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கார்த்திகை பட்டத்தில் வேர்க்கடலை விதைப் பண்ணை அமைத்து, இரட்டிப்பு லாபம் பெறலாம் என விழுப்புரம் விதைச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கார்த்திகை பட்டத்தில் வேர்க்கடலை அதிகளவில் விதைக்கப்படுகிறது. இந்த பட்டத்தில் வேர்க்கடலை விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.
வேர்க்கடலை பயிரில் விதைப்பண்ணை அமைக்க தரணி டி.எம்.வி., 14, ஜி.ஜெ.ஜி., 31, 32, 9, 18, 12 ,39 ஆகிய விதைகளில் ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகள் உள்ளன. விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், வேளாண் துறை அலுவலர்களை அணுகி, மானிய விலையில் விதைகளைப் பெற்று விதைப் பண்ணை அமைக்கலாம்.
விதைகளை விதைப்பதற்கு முன், ரைசோபியம் நுண்ணுயிர் பாக்கெட்டை கலந்து நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.
விதைத்த 30 நாட்களுக்குள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி விதைப் பண்ணையை பதிவு செய்ய பதிவு கட்டணம், வயல் ஆய்வு கட்டணம், பரிசோதனை கட்டணம் செலுத்த வேண்டும்.
விதைச்சான்று அலுவலர்கள் விதைத்த 60வது நாள் மற்றும் 90வது நாள் என 2 முறை வயல் ஆய்வு செய்வார்கள். மூன்றாவதாக 135 நாட்களுக்குள் வேர்க்கடலை விதைக் குவியலை ஆய்வு செய்வார்கள்.
வயல் ஆய்வின் போது பிற ரகம் ஏதாவது இருந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டும். வேர்க்கடலை பயிருக்கு அடியுரமாக ஜிப்சம் ஏக்கருக்கு 80 கிலோ மற்றும் விதைத்த 45வது நாள் மேல் உரமாக 80 கிலோ என மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும்.
இதனால் திரட்சியான காய்கள் பிடித்து, அதிக மகசூல் கிடைக்கும். மேலும், தகுதியான விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அரசு வழங்குவதால் விதைப் பண்ணை விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புஉள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.