மறைமலை நகர், : கால்நடை பராமரிப்பு துறை சார்பில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் பாலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், கால்நடை, பொதுப்பணி, வேளாண், தோட்டக்கலை, வேளாண் இயந்திரவியல் துறை உட்பட எட்டு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
நீர்வள - நிலவள திட்டத்தினை பாலூர் கிராமத்தில் செயல்படுத்துவது குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதில், பாலூர் ஏரி நீர்நிலை பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:
பாலூர் பெரிய ஏரி மற்றும் சித்தேரி, 500 ஏக்கர் பரப்பு கொண்டது. மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் மழை நீர்கால்வாய்களான ஜம்போடை, ஆத்துக்கால் இரண்டு துார்ந்து போய் உள்ளது.
இதனால், அவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசனக் கால்வாய்களையும் தூர்வாரி தரவேண்டும்.
இதன் வாயிலாக பாலூர், ரெட்டிபாளையம், உள்ளிட்ட ஏழு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து 1,000 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெறும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.