கடலுார், : கடலுார் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி வினா போட்டி நடத்தி, மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழ், புதுச்சேரி கோனேரிக்குப்பம் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ் அண்டு ரிசர்ச் கல்வி நிறுவனம் இணைந்து, 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்ற வினாடி வினா போட்டியை, மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் நடத்தி, திறமையான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன்படி, கடலுார் வண்டிப்பாளையத்தில் உள்ள மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் நேற்று போட்டி நடத்தப்பட்டது. போட்டியை, பள்ளியின் தாளாளர் கவிதா கண்ணன் துவக்கி வைத்தார். வினாடி வினா போட்டியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் நிதிஷ்குமார், யோகேஷ் ஆகியோர் முதலிடமும், பிளஸ் 1 மாணவர்கள் ஆதர்ஷ், ராகவ்பிரியன் இரண்டாமிடமும் பிடித்தனர். முதலிடம் பெற்றவர்களுக்கு, 'தினமலர் கேடயம்' மற்றும் சான்றிதழ், இரண்டாமிடம் பெற்ற மாணவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.