சித்தாமூர் : தொன்னாடு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 'ஜல் ஜீவன்' திட்ட பணியில் குளறுபடி உள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சித்தாமூர் அருகே தொன்னாடு ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் குழாய்கள் அமைக்க 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது.
குழாய்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துஉள்ள நிலையில், 184 குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் புதிய குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜல் ஜீவன் இணையதளத்தில் பயனாளியின் சரிபார்ப்பு நிலை பட்டியலில் 237 நபர்களுக்கு குழாய் இணைப்பு உள்ளதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில், சுமார் 70 குடும்பத்தினருக்கு ஏற்கனவே குழாய் இணைப்பு இருந்ததாகவும், இதில் 7 குடும்பத்தினரை சேர்ந்த கணவன் - மனைவி, தாய் - மகன் என ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு இரண்டு நபர்களுக்கு தனித்தனி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ள குழாய் அமைக்கும் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பொறியாளர் கருணாநிதி கூறியதாவது:-
தொன்னாடு ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் 184 குழாய் இணைப்புகள் மட்டுமே புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் ஏற்கனவே உள்ள குழாய் இணைப்பின் பட்டியலும், ஜல் ஜீவன் திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
குழாய் இணைப்பின் பட்டியலும் சேர்த்தே பதிவேற்றம் செய்யப்படுவதால், இணையதள பட்டியலில் இரண்டும் சேர்ந்து 237 என உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.