செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், பராமரிப்பாளர் இன்றி, தெருக்களில் வளரும் நாய்கள் ஏராளமாக சுற்றித் திரிகின்றன. நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
நகரில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த, 700 ரூபாய் என நிர்யணயித்து, 7 லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டது.
இப்பணியை, சென்னை சைதாப்பேட்டை, 'அனிமல் டிரஸ்ட் ஆப் இந்தியா' நிறுவனத்திற்கு, நகராட்சி நிர்வாகம், அக்., 19ம் தேதி, அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து, நகராட்சி சுகாதாரத் துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கணக்கெடுத்ததில், 1,350 நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
நகரில், கடந்த 21ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை, 81 தெரு நாய்களை பிடித்தனர். அதன்பின், நாய்களுக்கு கருத்தடை செய்யும் அரங்கில், நாய்களுக்கு கருத்தடை செய்ய அடைத்தனர்.
அரங்கில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.
இதை விசாரிக்க, காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் ஜெயந்தி விசாரணை அதிகாரியாக நியமித்து, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
இதுகுறித்து, நகராட்சி ஆணையர் பொறுப்பு நாகராஜன் அளித்த புகாரை அடுத்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னை மேற்கு சைதாப்பேட்டை ஒப்பந்ததாரர் புருஷோத்தமன், 55, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், செங்கல்பட்டு நத்தம் பகுதியில், நகராட்சி குப்பை கிடங்கு அருகில், ஐந்து நாய்கள் புதைக்கப்பட்டிருந்தது.
இதை, காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் ஜெயந்தி தலைமையில், ஏழு பேர் கொண்ட டாக்டர் குழுவினர், புதைக்கப்பட்ட இடத்தில், ஐந்து நாய்களை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்தனர்.
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.