திருபுவனை : திருபுவனை அருகே ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்துவிட்டு, தலைமறைவான பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனையை சேர்ந்தவர் விஜயகுமார்,57; இவரது மனைவி கனகராணி, 48; இவர்களுக்கு பாக்கியலட்சுமி,24; கார்த்திகாலட்சுமி,19; என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பாக்கியலட்சுமிக்கு திருமணமாகி தாமோதரன்,35; என்ற கணவர் உள்ளார்.
இந்நிலையில், கனகராணி, பாக்கியலட்சுமி இருவரும் திருபுவனையில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.
இவர்களிடம் திருபுவனை மட்டுமன்றி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர் சீட்டு கட்டி வந்தனர்.
மேலும், இருவரும் பலரிடம் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி, அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் இவர்ளுக்கு லட்ச கணக்கில் பணம் கடன் கொடுத்தவர்கள், பணத்தை திரும்ப கேட்கத் தொடங்கினர்.
இதனால், கனகராணி தனது இரண்டு வீடுகளில் ஒன்றை விற்றார். மற்றொரு வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கனகராணி, அவரது கணவர், 2 மகள்கள் மற்றும் மருமகன் ஆகிய 5 பேரும் தலைமறைவாகினர்.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கிடைத்த தகவலின்பேரில் தனிப்படைபோலீசார், விரைந்து சென்று, கோவை மாவட்ட வடவள்ளி பகுதியில் தங்கி தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த கனகரணி, அவரது கணவர் விஜயகுமார், மகள்கள் பாக்கியலட்சுமி,கார்த்திகாலட்சுமி, மருமகன் தாமோதரன் ஆகிய 5 பேரையும் கைது செய்து, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.