திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு கார்த்திகை தீபம், சொக்கப்பனையில் தீபம் ஏற்றபட்டது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், மேற்கு ரத வீதி லிங்கேஸ்வரர், நாகல்நகர் வரதராஜ பெருமாள், பாரதிபுரம் புவனேஸ்வரி அம்மன் கோயில்களில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது. வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்த பெண்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர். மாவட்டத்தில்அனைத்து பகுதி தெருக்களும் தீபத்தில் ஜொலித்தது.
கோபால்பட்டி: திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் மூலவர் சுப்பிரமணியசாமிக்கு 21 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்கார பூஜைகள்,1008 லட்சார்ச்சனை நடந்தது.
மாலையில் சுப்பிரமணிய சுவாமி ,மேளதாளம் முழங்க பக்தர்கள் அரோகரா கோஷமிட கோயிலை சுற்றி வந்தார். ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறக்கையாளர் அழகு லிங்கம், செயல் அலுவலர் சுகன்யா செய்திருந்தனர்.
நத்தம்: கைலாசநாதர் கோயிலில் காலை பால தண்டாயுதபாணி சுவாக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது.
மாலையில் கோவில்பட்டி பகுதி முக்கிய வீதிகள் வழியாக ரத ஊர்வலம் நடந்தது.
திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். நத்தம் மாரியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை யொட்டி பெண்கள் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.
கொடைக்கானல் :- கொடைக்கானல் , தாண்டிக்குடி மலைப் பகுதியில் கார்த்திகை தீபத்திருநாள் விழா கொண்டாடப்பட்டது. கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
* தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அபிஷேகம், தீபாராதனை , பஜன் நடந்தன. ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வில்பட்டி வெற்றிவேலப்பர், பூம்பாறை குழந்தை வேலப்பர். பண்ணைக்காடு சுப்பிரமணியசாமி, மயான காளியம்மன், கானல் காடு பூதநாச்சி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் விசேஷ வைபங்கள் நடந்தன. இங்குள்ள முருகன் கோயில்களில் மாலை சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.