திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றி உற்சவம் நடைபெற்றது.
திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை, வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது. நான்கு வேதங்கள் மலைக்குன்றுகளாக எழும்பி, குன்றின் மீதுள்ள கோவிலில், வேதகிரீஸ்வரர் சுயம்பு சுவாமியாக வீற்றுள்ளார்.
திருக்கழுக்குன்றம், சுற்றுபுற பகுதியினருக்கு, இக்கோவில் கார்த்திகை மஹா தீபம் முக்கியமானது. கோவிலில் தீபம் ஏற்றிய பிறகே, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவர். இந்நாளான நேற்று, இக்கோவிலில் மஹா தீப உற்சவம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, வேதகிரீஸ்வரர் மற்றும் பக்தவச்சலேஸ்வரர் கோவில்களில் பரணி தீபம் ஏற்றினர். நேற்று காலை 11:00 மணிக்கு, பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்திகளுக்கு, சிறப்பு அபிேஷக வழிபாடு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு, பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் இருந்து, தீபத்திற்கான எண்ணெய் குடத்துடன் புறப்பட்டு, பக்தர்களிடம் எண்ணெய் சேகரித்து, வேதகிரீஸ்வரர் கோவிலை அடைந்தனர்.
கோவிலில், 45 கிலோ கொள்ளளவு செப்பு கொப்பறையில், எண்ணெய் நிரப்பி, மாலை 6:00 மணிக்கு, மஹா தீபம் ஏற்றினர்.
சுவாமிக்கு மஹா தீபாராதனை நிகழ்த்தி வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள், சுவாமி தீபம் தரிசித்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகளுடன், சொக்கப்பனை தீயிட்டு, வீதியுலா நடைபெற்றது.
மாமல்லபுரம், மல்லிகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், தீபமேற்றி வழிபாடு நடந்தது.