மாநில அளவில் சிறந்த பட்டு கூடு அறுவடை செய்யும் மாவட்டத்திற்கான முதல் பரிசை தேனி பெற்றது.
தற்போது பட்டு கூடு விற்பனை அங்காடியில் வெண்பட்டுகள் தரத்தினை பொறுத்து ரூ.650 முதல் ரூ.750 வரை விற்பனை ஆகிறது. மாதம் 10 டன் பட்டு கூடு விற்பனை ஆகிறது.
மதுரை, தர்மபுரி, ஓசூர், திருச்சி, விருதுநகர் பகுதி வியாபாரிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.
மயிலாடும்பாறையில் பட்டுப்புழு விதைக்கூடு உற்பத்தி மையமும், லட்சுமிபுரம், டி.மீனாட்சிபுரம், மயிலாடும்பாறையில் இளம் புழு வளர்ப்பு மையமும் இயங்குகின்றன.
மாநில அளவில் பட்டு கூடு உற்பத்தியில் தேனி மாவட்டம் 3வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் சிறந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
வெண்மை நிற பட்டு கூடுகள் மட்டுமே தற்போது உற்பத்தியாகின்றன. 2021ல் 857 விவசாயிகள் ஆயிரத்து 850 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்தனர்.
நடப்பாண்டில் 984 விவசாயிகள் 2 ஆயிரத்து 106 ஏக்கரில் சாகுபடி செய்து வருகின்றனர். ஓராண்டில் 256 ஏக்கர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.
பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கணபதி கூறியதாவது: மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் விவசாயிகள் ஆர்வமுடன் மல்பெரி, பட்டுப்புழு வளர்க்கின்றனர். அரசு விதையும் கொடுத்து,
விளைபொருளை விற்றும் கொடுக்கிறது. இதனால் உரிய விலை கிடைக்கிறது. விற்ற பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. 21 நாட்களில் வருமானம் கிடைக்கிறது.
ஒரு ஏக்கரில் ஆண்டிற்கு நிகர லாபமாக ரூ.2.50 லட்சம் முதல் ரூ 3 லட்சம் வரை கிடைக்கும். ஒருமுறை பயிர் செய்து 15 முதல் 20 ஆண்டுகள் பட்டு வளர்ப்பில் ஈடுபடலாம். ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு அரசு செலவில் ஓசூர் பட்டு வளர்ப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி அளித்து வருகிறோம். ஆலோசனைகளுக்கு தேனி பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.