விழுப்புரம், : அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, விழுப்புரம் பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு, தி.மு.க., சார்பில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது அமைச்சர் கூறுகையில், 'இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாதற்கு முக்கிய காரணமாக இருந்து, அடித்தட்டு மக்கள் முன்னேறவும் சட்டம் வகுத்து கொடுத்தவர் அம்பேத்கர்.
அவரது நினைவைப் போற்றும் வகையில், தமிழகத்தில் அம்பேத்கர் பெயரில் சட்ட பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.
தற்போது, முதல்வர் ஸ்டாலின், அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்துள்ளது பெருமை அளிக்கிறது' என்றார்.
இதேபோன்று, அ.தி.மு.க., சார்பில், விழுப்புரம் நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் தலைமையிலும், பா.ஜ., சார்பில் மாநில துணைத் தலைவர் சம்பத் தலைமையிலும் மாலை அணிவித்தனர்.
காங்., சார்பில் மாவட்ட தலைவர் சீனுவாசகுமார் தலைமையிலும், தே.மு.தி.க., சார்பில் நகர செயலாளர் மணிகண்டன் தலைமையிலும், இந்திய குடியரசு கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சம்பத்குமார், நாம் தமிழகர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் செல்வம், வி.சி., சார்பில் மாவட்ட தலைவர் ஆற்றலரசு தலைமையிலும் அந்தந்த கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவெண்ணெய்நல்லுார் கள்ளுக்கடை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ., கூட்டுறவு மாநில துணைத் தலைவர் வேலு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செஞ்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பஸ் நிலையம் எதிரே அவரது படத்திற்கு நகர செயலாளர் காஜா நஜீர் தலைமையில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், வெ.அகரம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.