கடலுார் : திருக்குறளில் உள்ள அனைத்து குறள்களையும் ஒப்புவித்து, ரூ.10 ஆயிரம் பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆண்டுதோறும் 1,330 திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர், 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள்,திருக்குறளின் சிறப்புகளை அறிந்திருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பயிலும் மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுய நிதி கல்லுாரிகள், கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், கல்வியியல் கல்லுாரிகள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களும் பங்கு பெறலாம்.
தகுதியுள்ளவர்கள் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில், வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 04142 292039, 8220128653 ஆகிய தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவல், கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.