வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் உள்ள செக் போஸ்ட்கள் அனைத்தும் போலீசார் செயல்பாடின்றி முடங்கி போய் உள்ளது. இச்செயல் குற்றவாளிகளுக்கு சாதகமாக அமையும் என்ற கருத்து சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை சமீப காலமாக நகை திருட்டு சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது. இதேபோல் கொலை சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளன.
இவற்றையெல்லாம் முற்றிலுமாக தடுத்து கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி அற்ற ஒரு மாவட்ட நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும் என்பதே பலருடைய ஆவலாக உள்ளது. மாவட்ட காவல்துறை நிர்வாகமோ குற்ற வழக்குகள் கூடுதலாக தேங்கி கிடப்பதாகவும், தொடரப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கத்திலும் செயல்பாட்டில் இறங்கி உள்ளன. இதனால் மாவட்டத்தில் உள்ள செக்போஸ்ட்டுகளை குறிப்பாக வேடசந்துார் -கல்வார்பட்டி, பாளையம், தங்கம்மாபட்டி, ஒட்டன்சத்திரம் - நால்ரோடு, பழனி - தொப்பம்பட்டி நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து செக் போஸ்ட்களும் போலீசார் இன்றி மூடப்பட்டு கிடக்கின்றன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து செக்போஸ்ட்களும் மூடப்பட்டதால் மணல் கடத்தல், குட்கா உள்ளிட்ட போதை பாக்கு கடத்தல் என அனைத்து சட்டவிரோத கடத்தல்களும் தங்கு தடையின்றி நடைபெற ஏதுவாகும் சூழல் உருவாகி உள்ளது.
குற்றவாளிகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தாலே முதலில் செக் போஸ்ட் உள்ளது என்ற அச்சம் மனதில் இருக்கும். தற்போது எந்த பயமும் இல்லாததால் திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக குற்றவாளிகள் தலை துாக்கலாம் என்ற எண்ணம் தலைதுாக்கி உள்ளது.
இதை தவிர்க்க முடக்கப்பட்ட செக்போஸ்ட்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ப.சுப்பிரமணியன், அ.தி.மு.க., திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், வேடசந்துார்: மாவட்டத்தில் இயல்பாகவே லாட்டரி சீட்டு விற்பனை, சில்லறை மது விற்பனை , கனிமவள கொள்ளை ,குட்கா, கஞ்சா உள்ளிட்ட பொதைப்பொருட்கள் தங்கு தடை இன்றி நடக்கிறது .செக்போஸ்ட் அகற்றத்தால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே எந்த கவலையும் இன்றி இருக்கும்போது இந்த சமுதாயத்தை யார் சீர்படுத்துவது. பள்ளி ,கல்லுாரி மாணவர்கள், இளஞ்சிகிறார்கள் திசை தெரியாமல் பயணத்தை மேற்கொள்ள இது போன்ற செக்போஸ்ட் அற்ற செயல்கள் வழிவகுக்கும் . இது உகந்தது அல்ல.
அவசிய தேவை செக் போஸ்ட்
எம்.சிவக்குமார், தே.மு.தி.க., மேற்கு மாவட்ட செயலாளர், திண்டுக்கல்: இங்கு நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில், செக்போஸ்ட் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வந்தது. தற்போது ஐந்து நாட்களாக பெரும்பாலான செக்போஸ்ட்கள் மூடப்பட்டுள்ளன. தவறு நடப்பதை முதலில் கட்டுப்படுத்தக்கூடிய, கண்டுபிடிக்க கூடிய இடங்கள் செக்போஸ்ட்களாகும். மெயின் ரோடுகளில் வருபவர்களுக்கு செக்போஸ்ட் இருப்பது ஒரு பய உணர்வை தவிர்க்கும்.
தற்போது ஐயப்பன் சீசன் என்பதால் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள காலமாகும். நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து வாகன ஓட்டிகள் அச்சமின்றி செல்ல, செக் போஸ்ட்கள் அவசிய தேவையாகும்.
-------கூடுதல் கவனம் செலுத்துங்க
கே.சதாசிவம், பா.ஜ., மாவட்ட நிர்வாகி, வேடசந்துார்: மாவட்டத்தில் செக்போஸ்ட்கள் போலீசார் இன்றி திறந்து கிடப்பதால் குற்றவாளிகள் யார் வேண்டுமானாலும் மாவட்ட எல்லைக்குள் வரலாம் போகலாம் என்ற நிலை உள்ளது. வாகனங்களை சோதனை செய்யக்கூட ஆட்கள் இல்லை. இதனால் மண் கடத்தல் மணல் கடத்தல் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்துவது எளிதாகி விடுகிறது.
வாகனங்களை சோதனை செய்வதற்கு கூட செக்போஸ்ட்களில் போலீசார் இன்றி செக்போஸ்ட்களை திறந்து விட்டுள்ளனர். அனைத்து செக் போஸ்ட்களிலும் போலீசாரை நியமித்து பாதுகாப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.