சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி 6வது வார்டு ரயில்வே பீடர் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு, அடைப்பு என மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
இந்த ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 8ஆண்டுகளாக மேம்பால பணி நடக்கிறது. இப்பாலம் முடியும் இடத்தில் பணி செய்தபோது 6 வது வார்டு பகுதி குடிநீர் குழாய் இணைப்பு உடைந்தது. இங்கு கழிவுநீர் வாய்க்காலும் அடைபட்டது. தற்போது ஓராண்டாக கழிவுநீர் செல்ல வழியில்லாது தேங்கி நிற்கிறது.
6 மாதமாக குடிநீர் குழாயை சீரமைக்காததால் மக்கள் குடிநீருக்காக அலைகிறார்கள்.
நோய் பரப்பும் கொசுக்கள்
துரைபாண்டி: தெருவில் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. நவ.,1ல் கிராம சபை கூட்டத்தில்மனு கொடுத்தேன். அதற்கு பின்பும் தீர்வு கிடைக்கவில்லை. நடவடிக்கை எடுக்ககோரி மண்டல உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தும் பயனில்லை.
குடிநீருக்காக அலைகிறோம்
நாகசுந்தரி: தினமும் காலைகுடிநீரை தேடி அலைவதா, பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதா என தெரியவில்லை.எங்கள் பகுதியில் சரியான ரோடு, கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் வசதிகள் போதிய அளவு இல்லை. பிற வார்டுகளுக்கு குடிநீர் வரும் நிலையில் எங்கள் பகுதிக்கு வருவதில்லை. அடுத்து போராட்டம் தான் நடத்த வேண்டும் போல.
வேதனையா இருக்குது
கவுன்சிலர் சரண்யா (அ.தி.மு.க.): மேம்பால பணியால் கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் குழாயும் உடைந்துள்ளது. இப்பகுதி பிரச்னையை சரி செய்வது குறித்து பேரூராட்சியில் கோரிக்கை வைத்துள்ளேன். சரி செய்வதாக கூறினர்.
இதுவரை சரிசெய்யாமல் உள்ளது வேதனையளிக்கிறது. பகுதி மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியுள்ளேன். ஆனால் மேம்பால பணியை காரணம் காட்டிகாலம் தாழ்த்துகிறார்கள்.
இவ்வாறு கூறினார்.