மதுரை : மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தாலே ரூ.15 கட்டணமா என, வாகன ஓட்டிகள் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மதுரை பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, ஆம்னி பஸ் ஸ்டாண்டுகள் மாநகராட்சிகட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு கடைகள், கழிவறைகள் ஒப்பந்தம் விடப்பட்டு வாடகை வசூலிக்கப்படுகிறது.
அந்த வகையில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்குள் பயணிகளை ஏற்ற வந்து போகும் அரசு, தனியார் பஸ்களுக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் கார்களில் வருவோருக்கு கட்டணம் வசூலிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பஸ் ஸ்டாண்டுக்குள் கார்கள், டூவீலர்கள் வந்தால் பஸ்களுக்கு இடையூறு, விபத்து ஏற்படும். அதனால் பெரியார் பஸ் ஸ்டாண்ட் போல் மாட்டுத்தாவணி பஸ்டாண்டிலும் கார்கள், டூவீலர்கள் நுழைய அனுமதியில்லை. அதையும் மீறி நுழையும் டூவீலர்கள்,டிரை சைக்கிள்கள், சிறிய சரக்கு வாகனங்களுக்குகட்டணம் வசூலிப்பதில்லை. கார்களில் வருவோர் அதிக நேரம் பார்க்கிங் செய்து விடக் கூடாது என்பதற்காக ஒப்பந்ததாரர் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உண்டு.
முதியோர், மாற்றுத்திறனாளிகளை அழைத்தும் வரும் போது கார்களை இலவசமாக தான் அனுமதிக்கிறோம்.
இந்த வருமானத்தை கொண்டு ஒப்பந்ததாரர் பஸ் ஸ்டாண்ட்டை பராமரிக்க வேண்டும். கட்டண வசூலிப்பதில் குளறுபடிஇருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.