விழுப்புரம் : பணியில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதை கண்டித்து, விழுப்புரத்தில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் புதிய அரசாணையை அமல்படுத்தி, நகராட்சியில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்களை அரசு அலுவலகங்கள், நகராட்சி பொது கழிப்பறை, கல்விக் கூடங்களில் பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து விழுப்புரத்தில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை அலுவலகம் முன் 11:00 மணியளவில் முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து, மாவட்ட துப்புரவு தொழிலாளர்சங்கத் தலைவர் முருகன், செயலாளர் ஐயப்பன் தலைமையில் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், 'நகராட்சி பொது சுகாதாரப் பிரிவில் 124 பேர் நிரந்தர பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். இந்நிலையில் தமிழக அரசு, புதிய அரசாணையை அமல்படுத்தி, எங்களை நகராட்சி பொது கழிப்பறைகள், அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்களில் பணி அமர்த்தஉள்ளனர்.
நீண்ட காலமாக நகராட்சியில் பணியாற்று வரும் எங்களை, நகராட்சியில் இருந்து பிரித்து வெளியேற்ற முயற்சிக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. வரும் 2023ம் ஆண்டு 13 துாய்மைப் பணியாளர்கள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் நகராட்சியில் இருந்து வெளியேற்றினால், பண பலன்கள் கிடைக்காமல் போகும். எங்களை நகராட்சி பணியாளராகவே தொடரச் செய்ய வேண்டும்' என்றனர்.
போராட்டத்தின் போது, பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் அவர்களாகவே 12:00 மணியளவில் கலைந்து சென்றனர்.