விழுப்புரம் :L விழுப்புரத்தில் வரத்து குறைவினால் மல்லிகை உள்ளிட்ட பூக்கள் இரு மடங்கு விலை உயர்ந்தது.
கார்த்திகை தீப திருவிழா மற்றும் பூக்கள் வரத்து குறைவால், ஒரு வார காலமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. தொடர் மழை, பூ பூக்கும் சீசன் இல்லாமல், வரத்து குறைவினாலும் குண்டு மல்லி கிலோ 1,500 முதல் 3,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
முல்லை அரும்பு 1,100 ரூபாய், கனகாம்பரம் 1,200 ரூபாய், காக்கட்டான் 600 ரூபாய், ஜாதிமல்லி 1000 ரூபாய், அரளி 300 ரூபாய், ரோஜா 200 ரூபாய், சாமந்தி 140 முதல் 240 ரூபாய் வரையும், சம்பங்கி 100 ரூபாய்க்கும் நேற்று விற்பனையானது.
மல்லி, முல்லை, கனகாம்பரம் பூக்கள் விலை கனிசமாக உயர்ந்துள்ளதால், பிற பூக்களை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். விழுப்புரத்தில் பல்வேறு கடைகளில் குண்டு மல்லி கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக நந்தியா வட்டம் பூ விற்பனை செய்யப்படுகிறது.
ஓசூர், ராயக்கோட்டை, திருவண்ணாமலை பகுதியிலிருந்து, வழக்கத்துக்கு மாறாக பூக்கள் வரத்து குறைவினால், விலை உயர்ந்ததாக விழுப்புரம் வியாபாரிகள் தெரிவித்தனர்.