விழுப்புரம் : விழுப்புரத்தில், அரசு தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் வழியில், பயன்படுத்தப்படாமல் உள்ள பாழடைந்த பழைய நகராட்சி கடைகள் உள்ள பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதாலும், மது பிரியர்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை வீசிச் செல்வதாலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம் மேலவீதி - காமராஜர் வீதி சந்திப்பு பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய நகராட்சி கடைகள் பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கடைகள் சேதம் அடைந்தும் இரும்பு ஷட்டர்கள் உடைந்தும் காணப்படுகிறது. இதனருகே காலியாக உள்ள இடத்தில் நகராட்சி சார்பில் குப்பை கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
ஆனால், அங்கு குப்பைகளைக் கொட்டாமல், பழைய நகராட்சி கட்டடங்கள் உள்ள பகுதியிலும், அதன் அருகே உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உருது பள்ளி செல்லும் வழியிலும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், அதனுடன் மருத்துவ கழிவுகள், மருந்து, மாத்திரைகள் போன்றவை கொட்டப்படுகிறது.
இந்த குப்பைகளை அடிக்கடி தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், நகராட்சி குப்பைக் கிடங்கு மற்றும் பழைய நகராட்சி கட்டடத்தில் தினசரி பகல் நேரங்களில் பலர் மது அருந்துவதும், கஞ்சா பயன்படுத்துவதும் தொடர்கிறது.
இந்த நபர்கள் மது பாட்டில்கள், தின்பண்ட பாக்கெட்டுகளை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். ஒரு சில நேரங்களில் பள்ளி நேரங்களில் கூட பள்ளி வளாகத்தின் உள்ளேயே மது அருந்துகின்றனர்.
இதுகுறித்து கேட்டால், போதையில் அவர்கள் அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்துவதாக பள்ளி ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குப்பைகள், மருந்து பொருள்கள் கீழே கிடப்பதால் தொடக்கப் பள்ளி சிறுவர்கள் அதனை கையில் எடுத்து பார்க்கும் அபாய சூழல் உள்ளதாகவும், தினசரி மது பாட்டில்கள், குப்பைகளை ஆசிரியர்கள் வெளியே எடுத்து போடுவதும் வேதனையாக உள்ளது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர்.
அதுமட்டுமின்றி, 2 நாட்களுக்கு முன், பள்ளியில் புகுந்து மின் விசிறி, கணினி, சேர்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
விழுப்புரம் நகரின் மையத்தில், தொடரும் இந்த அவல நிலையை கலெக்டர் பார்வையிட்டு, பழமையான நகராட்சி கட்டடங்களை இடித்து அகற்றவும், குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும் வேண்டும்.