தேனி : சாக்கடை கட்டமைப்புகள் இன்றி தெருக்களில் ஓடும் கழிவுநீர், அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு, போக்குவரத்திற்கு இடையூறாக தெரு நடுவில் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர், மின்கம்பத்தால் விபத்து அபாயம், சீரமைக்கப்படாத குண்டும் குழியுமான மண், சரளை ரோடுகளால் போக்குவரத்திற்கு சிரமம் என பல்வேறு அடிப்படை வசதி குறைபாடுகளால் தேனி ஊஞ்சாம்பட்டி ஊராட்சி 8 வது வார்டில் வசிக்கும் கிழக்கு ரத்னா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சிரமப்படுகின்றனர்.
இக்குடியிருப்பில் கிழக்கு ரத்தினா நகரின் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ள முதல் பிரதான தெரு, அதனை ஒட்டி 2வது பிரதான தெரு உள்ளன.
இந்த 2 பிரதான தெருக்களிலும் முறையே 2, 4 என மொத்தக் குடியிருப்புப் பகுதிகளில் 9 தெருக்கள் உள்ளன.
250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சங்கத்தின் நிர்வாகிகள் கண்ணதாசன், பாலசந்திரன், முகமதுஅனீபா, பரத்குமார், முகமதுஅனீபா ஆகியோர் கூறியதாவது:
வினி யோகத்தி ல் குளறுபடி
ஊராட்சி சார்பில் வினியோகமாகும் குடிநீர் மேல்தொட்டியில் இருந்து இணைப்பு மூலம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வாரத்திற்கு குடிநீர் வருவது இல்லை.
வினியோகம் ஆகும் நாட்களில் தொடர்ந்து 3 நாட்கள் விடப்படுகிறது. இந்த குளறுபடிகளை சீரமைத்து தினமும் சீரான இடைவெளியில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகா தாரக்கே டு
பிரதான தெருவில் உள்ள முதல் குறுக்குத் தெருவை தவிர பிற 8 தெருக்களில் சாக்கடை கட்டமைப்புகள் அமைக்காததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் ஓடுகின்றன.
மழை நீருடன் கலந்து தெருக்களின் பள்ளங்களில் கழிவுநீர் தேங்குகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர தெருக்களில் சரளை மண்மாக இருப்பதால் கழிவுநீர் பூமிக்கடியில் வடிய முடியாத சூழல் உள்ளது.
இதனால் குடியிருப்போர் கழிவுநீர் குழிகள் அமைத்தும் பயனில்லாத நிலை உள்ளது.
இதனால் 8 தெருக்களில் சாக்கடை கட்டமைப்புக்களை உடனடியாக உருவாக்கி தெருக்களில் 'பேவர் பிளாக்' கற்கள், அல்லது சிமென்ட் ரோடு அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வாங்க மணி நகர் சென்று வருகின்றனர்.
இதனால் சிரமம் ஏற்படுகிறது. இப்பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். 2வது மெயின் தெருவின் 3 வது குறுக்குத்தெருவில் டிரான்ஸ்பார்மரும், 5வது தெருவில் மின்கம்பமும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
மேலும் தனியார் இடங்களில் குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
சாக்கடை கட்டமைப்புக்களை உருவாக்கி போக்குவரத்திற்கு சிரமமாக உள்ள குண்டும் குழியுமான தெருக்களில் 'பேவர் பிளாக்', தார் ரோடுகளை அமைக்க பல முறை கோரிக்கை மனுக்கள் அளித்தும், பலனில்லை. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.