மதுரை, : விருதுநகர் மாவட்டத்தில் துணை தாசில்தார்கள் சிலரை உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த அரசின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
விருதுநகர் மாவட்டத்தில் துணை தாசில்தார்களாக பணியாற்றிய சிலரை உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில்,'தங்களை மீண்டும் துணை தாசில்தார்களாக பணியமர்த்த உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: மனுதாரர்கள் விளக்கமளிக்க அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பவில்லை. புராணத்தில் விஸ்வகர்மா ஒரு நொடியில் ஒரு அரண்மனையை மாயாஜாலமாக உருவாக்க முடியும் என்றாலும், மனிதர்களாகிய நாம் படிப்படியாக செல்ல வேண்டும்.
அஸ்திவாரம் போட வேண்டும். பின் முதல் தளம், அடுத்ததாக அடுக்குமாடி கட்டலாம். அதுபோல் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களிடம் விளக்கம் பெற்று இறுதி செய்திருக்க வேண்டும்.
'உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்' என அரசுத் தரப்பு கூறியது. உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு முன் அரசுத் தரப்பில் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை.
இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது. விகிதாச்சாரக் கொள்கையை மனதில் கொள்ளவில்லை. பதவி இறக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.