கோவை : 'தமிழகத்தில் பெருகிவரும் லஞ்ச ஊழல் முறைகேடுகளை மாநில ஊழல் ஒழிப்பு இயக்குனரகம் வேடிக்கை பார்க்கிறது' என்று ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தங்கள் பதவியை பயன்படுத்தி ஊழல் செய்து மாத சம்பளத்தை விட பல மடங்கு சம்பாதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்கள், 1988ம் ஆண்டின் ஊழல் தடுப்பு சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டிய 'கிரிமினல்' குற்றவாளிகள். அவர்கள் எந்த ஒரு பதவியிலும் இருக்கவோ, மக்கள் வரிப்பணத்தில் இருந்து மாத சம்பளம் பெறவோ, ஓய்வூதியம் பெறவோ சற்றும் தகுதியற்றவர்கள்.
அரசுத் துறைகளில் சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய சேவைகளை லஞ்சம் கொடுக்காவிட்டால் பெற முடியாது என்ற நிர்பந்த நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நீர் நிலைகள், போக்குவரத்து பாதைகள், கோவில் நிலங்கள், புறம்போக்கு போன்ற பல வகையான அரசு நிலங்களில் உள்ள எண்ணற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கையகப்படுத்த கோர்ட் உத்தரவு இருந்தும் இன்னும் பல ஆயிரம் ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலேயே இருக்கின்றன.
ஆயிரக்கணக்கான விதிமீறல் கட்டடங்கள் அன்றாடம் கட்டப்படும்போது, லஞ்சம் தர முடியாமல் வரைபட அனுமதி பெற முடியாத பலர் இருக்கின்றனர். மாநிலத்தில் செயல்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தின் மிக முக்கியமான ஒரே பொறுப்பு, அரசு துறைகளில் இம்மியளவும் ஊழல் புகுந்து விடாமல் தடுப்பது.
ஆனால், இந்த துறை, பெருகி விட்ட ஊழல், முறைகேடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள். இதுதொடர்பாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் ஏற்கனவே தரப்பட்ட, 5 மனுக்கள் மீது மாநில தலைமை செயலர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. ஊழலை ஒழிக்கவும், அரசு நிர்வாகத்தை துாய்மைப்படுத்தவும், குடிமக்களுக்கு அனைத்து சேவைகளும் இலவசமாக கிடைக்கவும், இனியாவது தலைமை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.