பனமரத்துப்பட்டி, டிச. 7-
மல்லுாரில் குப்பை அகற்றும் பணி நிறுத்தப்பட்டதால், குப்பை கொட்ட இடம் ஒதுக்க தாசில்தாரிடம் கேட்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மல்லுார் பெரிய ஏரியில், கடந்த, 3ல் குப்பை கொட்ட முயன்றபோது, டவுன் பஞ்சாயத்து டிராக்டரை ஒரு சிலர் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக டவுன் பஞ்சாயத்து சார்பிலும், மற்றொரு தரப்பிலும் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கப்பட்டுள்ளது. டிராக்டர், போலீஸ் ஸ்டேஷன் முன், 3 நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. குப்பை அகற்றும் பணி நிறுத்தப்பட்டு, மல்லுாரில் ஆங்காங்கே தேங்கி, துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்நிலையில் மல்லுார் டவுன் பஞ்சாயத்து அவசர கூட்டம், தலைவர் லதா தலைமையில் நேற்று நடந்தது. அதில் வளம் மீட்பு பூங்காவில் தேங்கியுள்ள மரபு கழிவை அப்புறப்படுத்த, துாய்மை இந்தியா இயக்கம் திட்டத்தில், 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பூங்காவை ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகத்தினர், கழிவை அப்புறப்படுத்தும் பணி முடியும் வரை, டவுன் பஞ்சாயத்தில் சேகரிக்கப்படும் குப்பையை, வளம் மீட்பு பூங்காவுக்கு கொண்டு வராமல் மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளனர். இதனால் குப்பை கொட்ட தேவையான புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்து தருமாறு, சேலம் தாசில்தாரை கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அத்துடன் ஒட்டேரி பகுதி, பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, தேர்வு செய்யப்படும் இடத்தில் குப்பை கொட்டுதல்; நீர்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கம்பி வேலி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து, டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் கூறியதாவது:
வளம் மீட்பு பூங்காவில் தேங்கிய கழிவை அகற்றவும், மின் மயானம் அமைக்கவும், தற்காலிகமாக மாற்று இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்கின்றனர். ஆனால் வறண்டு கிடக்கும் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்கின்றனர். ஏரியில் தனி நபர்கள், தனியார் ஆலைகள் கழிவை கொட்டுகின்றனர். மக்களின் குப்பையை கொட்ட இடம் ஒதுக்கி தரும்படி தாசில்தாரிடம் கேட்டுள்ளோம். இடம் ஒதுக்கி தந்த பின் குப்பை கொட்ட முடியும். அதுவரை குப்பை சேகரிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.