சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் மோப்ப நாய், 'புரூஸ்' உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. ரயில் வழித்தடத்தில், 'டிராக் பெடரல்' சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சேலம் ஜங்ஷனில் நேற்று போலீசார் தீவிர சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை முதலே, சபரி, இன்டர்சிட்டி உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள், பாசஞ்சர் ரயில்களில், மோப்ப நாய் புரூஸ் மூலம், போலீசார் சோதனை மேற்கொண்டனர். பார்சல் பிரிவு, டிக்கெட் முன்பதிவு கட்டண அலுவலகம், பயணியர் ஓய்வறை, ஸ்டால், நுழைவாயிலில் உள்ள பூங்கா என அனைத்து இடங்களுக்கும் மோப்ப நாய் அழைத்துச்செல்லப்பட்டது. அனைத்து நடைமேடைகளில் பயணியர், வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அனுப்பப்பட்டனர்.
காக்கங்கரை, முகாசபாரூர், மேட்டூர், வீரபாண்டி, மோகனுார் என, சேலம் ரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிக்க, போலீசார், 'டிராக் பெடரல்' எனும் நடந்து செல்லும் முறையில் ஆய்வு பணி செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, டி.எஸ்.பி., குணசேகர் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மேற்கொண்டனர்.