ஜன்னலில் ரூ.97 ஆயிரம் அபேஸ்
ஆத்துார்: ஆத்துார், 21வது வார்டு, நாராயணசாமி தெரு, 5வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் துரை, 42. இவர் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த இவர், 97 ஆயிரம் ரூபாயுடன், 'ேஹண்ட் பேக்'கை ஜன்னல் ஓரம் வைத்துவிட்டு துாங்கிவிட்டார். மர்ம நபர்கள், ஜன்னல் ஓரம் இருந்த, 97 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றனர். துரை புகார்படி ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
புல்லட், பைக் திருட்டு
சேலம்: சூரமங்கலம், காமராஜர் நகர், நேரு தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 30. இவரது, 'ராயல் என்பீல்டு புல்லட்'டை, கடந்த, 3ல் வீட்டின் முன் நிறுத்தியிருந்த நிலையில் மாயமானது. அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் அம்மாபேட்டையை சேர்ந்த லட்சுமி நாராயணன், 23, என்பவரது, 'யமஹா' பைக் மாயமானது. அவர் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
பாம்பு கடித்து பெண் பலி
சேலம்: வீராணம் அருகே மன்னார்பாளையம், பச்சியம்மன் நகரை சேர்ந்த ராமலிங்கம் மனைவி சத்யா, 50. இவர் கடந்த, 4 மதியம், 12:00 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் மதியம், அவர் இறந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் வாலிபர் சாவு
மேட்டூர்: தர்மபுரி, பென்னாகரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 32. இவரது மனைவி ரோஜா, 24. சபரிமலைக்கு சென்று திரும்பிய சுரேஷ்குமார், பிரசாதத்தை மாமனார் வீட்டில் கொடுத்துவிட்டு, 'யமஹா' பைக்கில் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார். மேச்சேரி - மேட்டூர் சாலையில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. அதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ரோஜா நேற்று அளித்த புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.