சேலம், டிச. 7-
சிவன், முருகன் கோவில்களில் கார்த்திகை தீபத்தை ஒட்டி சொக்கப்பனை கொளுத்தி, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
கார்த்திகை தீபத்தையொட்டி, சேலத்தில் உள்ள சிவன், முருகன் கோவில்களில் நேற்று காலை முதல் சிறப்பு அபி ேஷகம், பூஜை நடந்தது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை, சுகவனேஸ்வரர், சுப்ரமணியருக்கு கோவிலின் முன் உள்ள கல் துாணில் தீபம் ஏற்றப்பட்டு ஜோதி தரிசனத்தை தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. அரோகரா கோஷம் முழங்க, பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
அதேபோல் கந்தாஸ்ரமத்தில், கந்தகிரி மலை உச்சியில், 55ம் ஆண்டு கந்த ஜோதி தரிசனம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சண்டி ேஹாமம், சக்ர நவ பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அரியானுார், 1,008 சிவாலயம், உத்தமசோழபுரம் கரபுரநாதர், குகை அம்பலவாணர் உள்ளிட்ட சிவன் கோவில்கள், ஊத்துமலை, குமரகிரி, காவடி பழநியாண்டவர் ஆசிரமம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மேலும், விநாயகர், காளி, மாரியம்மன் கோவில்களில் தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தியும், வீடுகளில் விளக்கு ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர்.
பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனுார் ஊராட்சி நத்தமேடு சிதம்பரேஸ்வரர் கோவிலில், சுவாமி, சிவகாமி அம்மனுக்கு அபி ேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலை, 1,008 விளக்கு ஏற்றி, திருக்கோடி கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. சொக்கப்பனை கொளுத்தி மக்கள் வழிபட்டனர். அதேபோல் களரம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் தீப திருவிழா நடந்தது.
ஆத்துார் கைலாசநாதர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவில்களில் நேற்று மாலை, தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. அதேபோல் தம்மம்பட்டி திருமண்கரடு முருகன் கோவிலில், கொப்பரை வைத்து அவற்றில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.
ஏற்காடு மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் கோவிலில், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு பரணி தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், அந்த ஒளி வெளிச்சம், ஏற்காடு அண்ணாமலையார் கோவிலில் தெரிந்தது. உடனே அண்ணாமலையார் கோவிலில், 150 லிட்டர் நெய், 100 மீட்டர் திரி பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம், தொடர்ந்து, 5 நாள் எரியவிடப்படும். ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணியர், அண்ணாமலையாரை தரிசித்தனர். பக்தர்கள் குவிந்ததால், அந்த கோவிலுக்கு செல்லும் சாலையில், 3 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.