சேலம், டிச. 7-
உடல் உறுப்பு தானத்தால், 8 பேர் மறுவாழ்வு பெற்ற நிலையில், வாலிபர் குடும்பத்துக்கு, வி.சி., கட்சியினர், 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.
சேலம் மாவட்டம் மல்லுாரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன், 26. பி.காம்., பட்டதாரி. சேலம் சேகோசர்வ் ஊழியரான இவர், கடந்த, 30ல் விபத்தில் படுகாயமடைந்தார். டிச., 1ல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு, கட்டுப்படாமல் மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர், வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அதன்மூலம், 8 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
இந்நிலையில், வி.சி., மாநகர் துணை செயலர் காயத்ரி தலைமையில் நிர்வாகிகள், நேற்று மணிகண்டன் வீட்டுக்கு சென்று, அவரது படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்க, வாலிபரின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.