கையெழுத்து இயக்கம்
சேலம்: அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் வள்ளியை இடமாற்றம் செய்யக்கூடாது எனக்கூறி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது. சேலம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நுழைவாயில் முன் நடந்த நிகழ்வுக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமை வகித்தார். பெண் நிர்வாகிகள், நோயாளியை சந்திக்க வரும் பார்வையாளர், மக்களிடம், கையெழுத்து பெற்றனர்.
6வது வார்டில் மேயர் ஆய்வு
சேலம்: சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், 6வது வார்டில் சின்ன கொல்லப்பட்டி, சரஸ்வதி நகர், அண்ணா சாலை, காந்தி தெரு, திருவள்ளுவர் சாலை ஆகிய பகுதிகளில், மேயர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். சின்ன கொல்லப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, சத்துணவு கூட கட்டடம் சேதமடைந்திருப்பதை ஆய்வு செய்த மேயர், அதை இடிக்கவும், குழந்தைகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டார்.
வீட்டில் இருந்த நாக பாம்பு மீட்பு
ஆத்துார்: அப்பமசமுத்திரம், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 50. இவரது வீட்டில் நாக பாம்பு புகுந்தது. ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள், பாம்பை உயிருடன் பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
22ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
சேலம், டிச. 7-
சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்திபன் அறிக்கை: மேற்கு கோட்டம் சார்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கு குறைதீர் கூட்டம், வரும், 22 காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது.
சூரமங்கலம் தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் ஓய்வூதியர்கள், பிரச்னை, கோரிக்கைகளை நேரிலும் மனுவாகவும் தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பை, ஓய்வூதியர்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மகுடஞ்சாவடி அருகே
விபத்தில் தம்பதி பலி
மகுடஞ்சாவடி, டிச. 7-
இளம்பிள்ளை அருகே நடுவனேரி கிராமம், வேலகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 57; தறித்தொழிலாளி. இவரது மனைவி சூரியகலா, 37. இவர்களது மூத்த மகன் தமிழ்செல்வன், 21; பி.காம்., முடித்துவிட்டு வீட்டில் தந்தை தொழிலுக்கு உதவியாக இருந்தார். இவருக்கு கடந்த, 3ல் திருமணமானது. இளைய மகன் பார்த்தசாரதி, 19, ஓமலுார் அருகே உள்ள தனியார் கல்லுாரியில், பி.இ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
முருகேசன், சூரியகலா ஆகியோர், நேற்று மாலை, 4:30 மணிக்கு, கொங்கணாபுரம் அருகே உள்ள முருகன் கோவிலுக்கு, 'பேஷன் புரோ' பைக்கில், சேலம் - கோவை பைபாஸில் சென்று கொண்டிருந்தனர். மகுடஞ்சாவடி மேம்பாலம் அருகே சென்றபோது, சரக்கு வாகனம், பைக் மீது மோதியது. அதில் தம்பதியர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர். மகுடஞ்சாவடி போலீசார்
விசாரிக்கின்றனர்.
மருத்துவமனை படுக்கையில்
இருந்து விழுந்தவர் சாவு
ஆத்துார், டிச. 7-
பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஒட்டப்பட்டி, புதுார்புதுகாலனியை சேர்ந்த, முத்தையன் மகன் கலியமூர்த்தி, 54. கூலித்தொழிலாளியான இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. கடந்த நவ., 26ல், ஆத்துார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை, 3:00 மணிக்கு அவருக்கு வயிற்று வலி அதிகமானது. படுக்கையில் இருந்து விழுந்தபோது, அதில் இருந்த கம்பி, இடதுபுற கண் புருவத்தில் கிழித்து, தலையின் பின்புற மண்டையில் அடிபட்டதில் படுகாயமடைந்தார். மருத்துவ குழுவினர், அவரை பரிசோதனை செய்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நேற்று கலியமூர்த்தி உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
2வது மனைவிக்கு 'அடி'
கணவர் மீது வழக்கு
ஓமலுார், டிச. 7-
ஓமலுார், பெரியேரிப்பட்டியை சேர்ந்த வையாபுரி மனைவி சாந்தி, 39. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சாந்தி, 6 மாதங்களாக பிரிந்து தாய் வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில், கடந்த நவ., 27ல், சாந்தி, அவரது தம்பிகளுடன், கணவர் வையாபுரியிடம் சமாதானம் பேச சென்றனர். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் காயம் அடைந்ததாக, 29ல் ஓமலுார் அரசு மருத்துவமனையில் சாந்தி அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக நேற்று அவர் அளித்த புகாரில், 'கணவர் வையாபுரி, அவரது முதல் மனைவியின் மகன்கள் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்' என தெரிவித்திருந்தார். தொளசம்பட்டி போலீசார் விசாரித்து வையாபுரி, 55, அவரது முதல் மனைவியின் மகன்கள் உள்பட, 4 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.
ஆடு, கோழிகள் கொலை
போலீசில் விவசாயி புகார்
ஆத்துார், டிச. 7-
ஆத்துார் அருகே அப்பமசமுத்திரம், வடக்குபுதுப்பாளையத்தை சேர்ந்த விவசாயி பழனிவேல், 50. இவர் நேற்று, ஆத்துார் ஊரக போலீசில் அளித்த மனு:
விவசாய தோட்டத்தில் மாடு, ஆடு, கோழிகளை வளர்த்து வருகிறேன். டிச., 5ல், மேய்ச்சலுக்கு சென்ற ஒரு ஆடு, 8 கோழிகள் இறந்தன. அங்கு குருணை மருந்து வைத்துள்ள தீவனத்தை சாப்பிட்டு இறந்தது தெரியவந்துள்ளது. அதனால், குருணை மருந்து வைத்து கொன்றவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'விசாரணை மேளா'வில்
30 மனுக்கள் மீது சமரசம்
காடையாம்பட்டி, டிச. 7-
தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்டு, மலைக்கிராமங்கள் உள்பட, 20 தாய் கிராமங்கள், 135 குக்கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், மக்களின் சிறு புகார் மனுக்கள் குறித்த, 'சிறப்பு விசாரணை மேளா', தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,க்கள் பழனிசாமி, கருப்பணன் தலைமையில், இரு நாளாக நடந்தது. அதில், 50க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குறித்து, இரு தரப்பினரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில், 30 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.
தீர்த்தக்குட ஊர்வலம்
இன்று கும்பாபிேஷகம்
மகுடஞ்சாவடி, டிச. 7-
இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமம், முத்துக்குட்டியூரில் உள்ள குழி இருசாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று காலை, சித்தேஸ்வரர் கோவிலில் இருந்து, ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடங்கள் எடுத்து, தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக சென்று அம்மன் கோவிலை அடைந்தனர். மாலை, யாகசாலை பிரவேசம், கோபுரங்களுக்கு தானியம் நிரப்புதல், கோபுரத்தில் உள்ள மூர்த்திகளுக்கு கண்திறத்தல், முதல்கால யாக பூஜை உள்ளிட்டவை நடந்தது. உண்டியல் காணிக்கை ரூ.9 லட்சம்
சேலம், டிச. 7-
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜா, கோவில் உதவி கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் அறங்காவலர்கள் வள்ளியப்பா, அன்புமணி முன்னிலையில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில் திருவிழா உண்டியலில், 5 லட்சத்து, 22 ஆயிரத்து, 355 ரூபாய்; 9 கிராம் தங்கம், 172 மி.கிராம் வெள்ளி; பொது உண்டியலில், 4 லட்சத்து, 30 ஆயிரத்து 975 ரூபாய்; 37 கிராம் தங்கம், 205 மி.கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டது தெரியவந்தது. தவிர அமெரிக்காவின் யு.எஸ்., டாலர் - 10, ஒரு ரியால்(சவூதி) இருந்ததாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.