சேலம், டிச. 7-
நாடு முழுதும் அம்பேத்கரின், 66வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சேலம், சுந்தர் லாட்ஜ் பஸ் ஸ்டாப் சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், டி.ஆர்.ஓ., மேனகா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், பா.ஜ., சார்பில் மாநகர் தலைவர் சுரேஷ்பாபு, இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன், மா.கம்யூ., சார்பில் பிரவீன், அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாநில தலைவர் அண்ணாதுரை, புத்தா டிரஸ்ட் சார்பில் மாவட்ட தலைவர் செல்வகுமார் மாலை அணிவித்தனர்.
காங்., சார்பில் மாநகர் தலைவர் பாஸ்கர், உலகநம்பி, ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, வி.சி., உள்ளிட்ட கட்சியினர், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை, தமிழ்நாடு அரசு எஸ்.சி., - எஸ்.டி., ஊழியர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.
இந்திய குடியரசு கட்சி சார்பில், பி.நாட்டாமங்கலத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓமலுாரில் வி.சி., பா.ஜ., த.மா.கா., சார்பிலும், வாழப்பாடியில் பா.ஜ., உடையாப்பட்டியில் பா.ம.க., கெங்கவல்லியில் தி.மு.க., ஆத்துார், அம்மம்பாளையத்தில், வி.சி., சார்பிலும், அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.