சேலம், டிச. 7-
சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம் தலைமையில் குழுவினர், காடையாம்பட்டி அடுத்த கொங்குபட்டி, ஒலக்கூர் கிராமங்களில் அடுத்தடுத்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஐயனாரப்பன் டையிங் ஒர்க்ஸ், காமராஜ் சலவை ஆலை, சங்கர், சரவணன், தன்ராஜ், சித்ரா பெயர்களில் இயங்கிய டையிங் என, 6 சாய ஆலைகள் அனுமதியின்றி இயங்கியதை கண்டுபிடித்தனர்.
அதேபோல் தெற்கு தாலுகாவில் சீலநாயக்கன்பட்டி, சிவசக்தி நகர் மோகன் டையிங், சண்முகம் டையிங், கந்தா கலர்ஸ், கிருஷ்ணா டையிங், அமானி கொண்டலாம்பட்டியில் சுப்ரமணி சலவை ஆலை என, ஐந்து ஆலைகள் முறைகேடாக இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம், 11 சாய ஆலைகளின் மின்சாரம் உடனே துண்டிக்கப்பட்டது.
செந்தில் விநாயகம் கூறுகையில், ''அனுமதியின்றி இயங்கிய சாய ஆலைகள், கழிவுநீரை வெளியேற்றியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு அடுத்து மூட உத்தரவிடப்படும். அனுமதி பெற்ற ஆலைகள், சுத்திகரிப்பு செய்யாத கழிவுநீரை வெளியேற்றினாலும் அவை மூடப்பட்டு அபராதம் விதிக்கப்படும். முறைகேடு சாய ஆலைக்காக, இடத்தை வாடகைக்கு விடும், அதன் உரிமையாளர் மீது வழக்கு தொடர்வதோடு சட்ட நடவடிக்கை பாயும். இதுதொடர்பாக உரிமையாளர்கள், 11 பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.