நாமக்கல், டிச. 7-
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், கோவில், வீடுகளில், தீபம் ஏற்றி, கொண்டாடினர்.
நாமக்கல் ரங்கநாதர் கோவில் படிக்கட்டில், 1,008 தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
நாமக்கல் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், 1,008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. காலையில், மகா சங்கல்பம், கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, 1,008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவில், சந்தைபேட்டை புதுார் செல்வவிநாயகர் கோவில், குட்டைதெரு விநாயகர் கோவில், கடைவீதி சக்தி விநாயகர் கோவில்,
தட்டாரத்தெரு ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பெரும்பாலான கோவில்களில், சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சுற்றிலும் நின்ற பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு உப்பை துாவினர்.
ராசிபுரம் அருகே உள்ள களங்குளம் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் விழாவின் முக்கிய வடிவம் கார்த்திகை தீப தரிசனம் நடந்தது. போதமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சுவாமி அண்ணாமலையார், அம்பாள் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நாமக்கல்-மோகனுார் சாலை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், மோகனுார் காந்தமலை பாலதாண்டாயுதபாணி சுவாமி கோவிலிலும், காலை, 11:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மல்லசமுத்திரம்
முத்துகுமார சுவாமி கோவிலில் முதலாமாண்டு தீபத்திருவிழா நடந்தது.
மேலும், நாமக்கல் மாவட்டம் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீதிகளில், அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது.