எருமப்பட்டி, டிச. 7-
புரட்டாசி மாத பட்டமாக நெற்பயிர் நடவு செய்துள்ள வயல்களில், மஞ்சள் நோய் தாக்கி வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எருமப்பட்டி மற்றும் கொல்லிமலை அடிவார பகுதிகளில் பெய்த கன மழையால், அலங்காநத்தம், பெட்டிரெட்டிப்பட்டி, கோம்பை, பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் முதல் போக புரட்டாசி மாத பட்டமாக, 400 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் நடவு செய்துள்ளனர்.
நடவு செய்து, 60 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒருசில பகுதிகளில், நெற்பயிர்கள் மஞ்சள் நிறத்தில் மாறி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, பொன்னேரி கை காட்டியை சேர்ந்த விவசாயி கூறுகையில், ''புரட்டாசி மாத பட்டத்தில், 2 ஏக்கரில் நெற்பயிர் நடவு செய்துள்ளேன். 60 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது, நெற்பயிர்கள் மஞ்சள் நிறத்தில் மாறி வருகின்றன. நோய் பரவல் அதிகரிக்கும் முன், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து தடுப்பு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.