பள்ளிபாளையம், டிச. 7-
பள்ளிபாளையம் அருகே, எலந்தகுட்டை அஞ்சல் அலுவலகத்தில் நேற்று, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தனியார் சர்க்கரை ஆலை பள்ளிபாளையம் கிளை சார்பில், 50க்கு மேற்பட்ட விவசாயிகள், மாநில துணை தலைவர் நல்லாகவுண்டர் தலைமையில், தபால் மூலம் முதல்வருக்கு மனு அனுப்பினர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கரும்பு இன்சூரன்ஸ் திட்டத்தை ஆண்டு முழுவதும் பதிவு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு உடனே வழங்க வேண்டும். கரும்பு விவசாயத்தை பாதுகாக்க, அனைத்து சர்க்கரை ஆலைகளிலும், எத்தனால் உற்பத்தியை துவக்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகளில் எடை மோசடி, ரெக்கவரி மோசடி ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். மாநில அரசு வருவாய்
பங்கீடு முறையை ரத்து செய்து, பரிந்துரை விலையை டன்னுக்கு, 4,000 ரூபாய் என, அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.