கல்லுாரி மாணவர் தற்கொலை
ப.வேலுார், டிச. 7--
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகரை சேர்ந்தவர் காளியண்ணன்,49; விவசாயி. இவரது மகன் மனோஜ்,21; கோவையில் உள்ள தனியார்
கல்லுாரியில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மனோஜின் பெற்றோர் தோட்டத்திற்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்த போது, மஜோஜ் விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரை, ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தீக்குளித்த பெண் பலி
பள்ளிபாளையம், டிச. 7-
பள்ளிபாளையம் அருகே படவீடு பகுதியை சேர்ந்தவர் ரோஜா,34; நுாற்பாலை தொழிலாளி. கருத்து வேறுபாடால் அவர் தன் கணவரை விட்டு பிரிந்து, மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
கடந்த அக்., 28ம் தேதி ரோஜா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று மதியம் சிகிச்சை
பயனில்லாமல் ரோஜா இறந்தார். அவரது மகள் தமிழ்மணி, வெப்படை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மனைவி மாயம்
கணவர் புகார்
சேந்தமங்கலம், டிச. 7-
சேந்தமங்கலம் அடுத்த, பொட்டணம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார், 41; பெயிண்டர். மனைவி நேசமலர், 37; இவர்களுக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த, 30ல், கணவன், மனைவியிடையே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், நேசமலர் கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் தேடிவருகின்றனர்.
உலக மண் தினம் கொண்டாட்டம்
பள்ளிபாளையம், டிச. 7-
பாதரையில் உலக மண் தினம் விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த பாதரை பகுதியில், மண் வளத்தை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என, வலியுறுத்தி பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் உலக மண் தினம் விழா பஞ்., தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது.
விழாவில், 35 விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அறிக்கை தரப்பட்டது. மேலும் விளை நிலத்தின் தன்மையை அறிய மண் பரிசோதனைக்கு மண்னை எப்படி எடுத்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என செய்முறை பயிற்சி விவசாயிகளுக்கு கற்றுதரப்பட்டது.
விவசாயிகள் மண் வளம் காக்க உறுதி மொழி எடுத்தனர்.
மாற்றுத்திறனாளிகள் தின விழா
மல்லசமுத்திரம், டிச. 7--
மல்லசமுத்திரம் அடுத்த, துத்திப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவிற்கு தலைமை ஆசிரியை கஸ்துாரி தலைமை வகித்தார். மல்லசமுத்திரம் ஒன்றிய உள்ளடங்கிய கல்வி சிறப்பு பயிற்றுனர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகள் சக மாணவர்களுடன் காலை இறைவணக்க கூட்டத்தில் சைகை முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசையுடன் பாடப்பட்டது.
மேலும், விழித்திரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் பற்றிய, "ஷ்வாஸ்" என்ற மராத்தி மொழி திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இத்
திரைப்படத்தின் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் மனநிலைபற்றி சகமாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இருந்தது. ஆசிரியர்கள் மல்லிகா, சாந்தி, சண்முகசுந்தரம், சம்பத்குமார் ஆகியோர் மாற்றுத்திறனாளி குழந்தைகளை
ஊக்குவித்தும், பயிற்சியும் அளித்தனர்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்
மலைக்கோவிலில் துாய்மை பணி
திருச்செங்கோடு, டிச. 7-
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் கார்த்திகை தீப சொக்கபனை கொளுத்தும் விழா இன்று பவுர்ணமி திதியில் மாலை, 7:00 மணிக்கு நடக்கிறது. சொக்கபனை கொளுத்தும் இடத்தின் சுற்றுபுறத்தில் உள்ள செடி,கொடிகள் அகற்றும் பணியை நகராட்சி துாய்மை பணியாளர்கள் செய்தனர். நகராட்சி சேர்மேன் நளினி மலை மீது உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என கடைக்காரர்களுக்கு துணிப்பைகளை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். துப்புரவு அலுவலர் வெங்கடாஜலம்,ஆய்வாளர் குமரவேல் ஆகியோர் பார்வையிட்டனர்.
தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை
குமாரபாளையம், டிச. 7-
குமாரபாளையம் அருகே ரேஷன் கடை,
தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.
குமாரபாளையம் அருகே குப்பாண்ட
பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதி ரேஷன் கடை, எம்.ஜி.ஆர்., நகர் பஸ் ஸ்டாப் முதல், அண்ணா நகர் வரை புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. ஊராட்சி தலைவி கவிதா தலைமை வகித்தார்.
தி.மு.க.,வுக்கு தாவிய
அ.தி.மு.க., கவுன்சிலர்
பள்ளிபாளையம், டிச. 7-
ஆலாம்பாளையம் டவுன் பஞ்., அ.தி.மு.க., கவுன்சிலர் நேற்று, தி.மு.க., வில் இணைந்தார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம்
ஒன்றியம், ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,
6 வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், நேற்று அ.தி.மு.க.,விலிருந்து விலகி, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., தி.மு.க.,
செயலாளர் கார்த்திராஜா, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் முன்னிலையில், தி.மு.க., வில் இணைந்தார்.
அப்போது, டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா, துணை தலைவர் சண்முகபிரியா, மற்றும் தி.முக., கவுன்சிலர்கள் உடனிருந்தனர். கவுன்சிலர் பாலசுப்ரமணியம் தி.மு.க.,வில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு, அ.தி.மு.க.,வில் இணைந்தர். நேற்று மீண்டும் தி.மு.க. இணைந்து விட்டனர். இதனால் ஆலாம்பாளையம் டவுன் பஞ்., அ.தி.மு.க.,கவுன்சிலர் பலம் ஐந்தாக குறைந்தது.
சின்ன ஓங்காளியம்மன் கோவிலில்
டிச., 12 ல் கும்பாபிஷேக விழா
திருச்செங்கோடு, டிச. 7-
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக நாள் விழா டிசம்பர் 12ம் தேதி நடக்கிறது.
கும்பாபிஷேக நாள் விழாவை முன்னிட்டு டிசம்பர், 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 108 கலச யாக பூஜையுடன் விழா துவங்குகிறது. மாலை முதல் கால பூஜை, 1,008 கலச பிரதான பூஜைகள்,ேஹாமங்கள், பூர்ணாஹீதி, தீபாரதனை நடக்கிறது.
டிசம்பர், 12ம் தேதி திங்கட்கிழமை காலை மஹா அபிஷேகம் இரண்டாம் கால ஹோமங்கள், தீபாராதனை, அம்பாளுக்கு, 1,008 கலசபிஷேகம், அலங்காரம், மஹாதீபாராதனை நடக்கிறது.
அரூர்புதுாரில்
3,000 மரக்கன்று நடவு
மோகனுார், டிச. 7-
மோகனுார் ஒன்றியம், அரூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரூர்புதுாரில், தனியார் வங்கி பவுண்டேசன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
பி.டி.ஓ., தேன்மொழி தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் செல்வமணி, துணைத்தலைவர் கவிதா, பவுண்டேசன் நிர்வாகி சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து, அப்
பகுதியில், 3,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
கலெக்டர் முகாம் ஆபீஸில்
சிக்கிய உடும்பு
நாமக்கல், டிச. 7-
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவரின் இடுக்கு பகுதியில், சிறிய உடும்பு ஒன்று பதுங்கி இருந்தது.
தீயணைப்பு படை வீரர்கள், ஒன்னறை அடி நீளம் கொண்ட உடும்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அதை காட்டுப்பகுதியில் விடுவித்தனர்.