எருமப்பட்டி, டிச. 7--
எருமப்பட்டி யூனியன் முட்டாஞ்செட்டி பஞ்., பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எருமப்பட்டி யூனியன் முட்டாஞ்செட்டி பஞ்., தலைவராக இருந்த கமலபிரியா மற்றும் துணை தலைவர் சபாரத்தினம் ஆகியோருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பஞ்., எந்த பணிகளும் செய்யப்படவில்லை என புகார் எழுந்தது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் பஞ்., அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வில்லை என, பொது மக்கள் பஞ்.,அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மக்களை கலைந்து போக செய்தனர்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் பஞ்., அடிப்படை பணிகளை மேற்கொள்ள வசதியாக கலெக்டர் ஸ்ரோயா பி சிங், தலைவர் துணை தலைவரிடம் இருந்த செக் பவரை பறித்து பி.டி.ஓ விடம் ஒப்படைத்ததுடன் பஞ்., நிர்வாகிக்கவும் உத்திரவிட்டிருந்தனர். இந்நிலையில் முட்டாஞ்செட்டி கிழக்கு தெரு, காலணி உள்ளிட்ட பகுதியில் நீண்ட காலமாக குடிநீர், கழிப்பிடம், சாக்கடை, தெரு விளக்கு
உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதியும் செய்யாமல் உள்ளதால், மக்கள் கடும்
அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே பி.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் தலையிட்டு இந்த பகுதியில் சீரான குடீநீர் வழங்கவும், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.