தர்மபுரி, டிச. 7-
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில், மாலை, 6:30 மணிக்கு மேல், கோவில் கொடிமரம் அருகே உள்ள தீபத்துாணில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில், கடைவீதி
மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கோரி ஆதிசக்தி சிவன் பீடம், எஸ்.வி.,ரோடு சிவன் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதகர் கோவிலில் நேற்று, கார்த்திகை தீப சிறப்பு பூஜை நடந்தது.
* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் மயிலை மலை மீதுள்ள பாலமுருகன் கோவிலின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், 108 சங்காபிஷேகம், கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. நேற்று காலை, 5:30க்கு பரணி தீபமும், மாலை, 5:45க்கு மயிலை மலையில் பாலமுருகன் கோவில்மேல் மஹாதீபமும் ஏற்றப்பட்டது.
* ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு மேல், ஓசூர் சப்கலெக்டர் சரண்யா, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் பக்தர்கள், கோவிலில் இருந்து விளக்கை எடுத்து சென்று, மஹா தீபமேற்றி தரிசனம் செய்தனர்.
அதேபோல், ஓசூர் ராம்நகர் சோமேஸ்வரர் கோவில், தேன்கனிக்கோட்டை காசி விஸ்வநாதர் கோவில், மல்லிகார்ஜூன துர்க்கம் மலை மீதுள்ள சிவன் கோவில், கெலமங்கலம் கவுரி சித்தலிங்கேஸ்வரர் கோவில், கூச்சுவாடி முருகன் கோவில்களில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.