தீர்த்தமலையில் கார்த்திகை தீபம்
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலையில், பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, இங்குள்ள மலைக்கோவில் உச்சியில் நேற்று, தீபம் ஏற்றப்பட்டது. அதே போல், அரூர் மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள வாணீஸ்வரர் கோவில், பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் தீபம் ஏற்றப்பட்டது. இதை ஏராளமான
பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தக்காளி விலை குறைவு
தர்மபுரி, டிச. 7-
தர்மபுரி மாவட்டத்தில், ஐந்து உழவர் சந்தைகளில் தற்போது
தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், இதன் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி, 10 முதல், 12 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம், 7 எனவும், நேற்று, 5 ரூபாய் எனவும் விலை குறைந்து விற்பனையானது. இதனால்,
தக்காளி சாகுபடி விவசாயிகள் கவலை
அடைந்துள்ளனர்.
திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
தர்மபுரி: தர்மபுரி யூனியனுக்கு உட்பட்ட கடகத்துார், சோகத்துார் பஞ்.,க்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி கழிப்பறை, சாக்கடை கால்வாய், சமுதாக கூடம் அமைக்கும் பணி உள்ளிட்ட, 63.65 லட்ச ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் துரைமுருகன், தர்மபுரி பி.டி.ஓ., கணேசன் உட்பட, பலர் உடனிருந்தனர்.
தீ தடுப்பு விழிப்புணர்வு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை வேளாண் துறை அலுவலக வளாகத்தில், தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல், திடீரென தீப்பற்றினால் எவ்வாறு தீயை அணைப்பது, தீயணைப்பானை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கினார். இதில், ஊத்தங்கரை வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா, வேளாண் உதவி அலுவலர் பிரபாவதி மற்றும் வேளாண் துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
16 பேருக்கு வீட்டுமனை பட்டா
ஓசூர்: தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்.,
16வது வார்டுக்கு உட்பட்ட சீனிவாசபுரம்
கிராமத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழா நடந்தது. டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், 16 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். தி.மு.க., இளைஞரணி மாநில
துணை செயலாளர் சீனிவாசன், டவுன் பஞ்., துணைத்தலைவர் அப்துல்கலாம், கவுன்சிலர் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஜே.சி.ஐ., நிர்வாகிகள் பதவியேற்பு
ஓசூர்: ஜே.சி.ஐ., ஓசூர் சிப்காட் சார்பில், 2023 ம் ஆண்டிற்கான பதவியேற்பு விழா நடந்தது. தலைவராக வெங்கடேசன் பொறுப்பேற்றார். அவருக்கு, மண்டல தலைவர் ராஜேஷ் சுப்பிரமணியன், பதவி பிரமாணம் செய்து வைத்தார். உயர்நிலைப்பள்ளிகளில் துணை ஆய்வாளர் சுரேஷ்பாபு, முன்னாள் தேசிய துணைத்தலைவர் எழிலரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பஸ்சிலிருந்து விழுந்தவர் பலி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நார்த்தம்பட்டியை சேர்ந்தவர் தேவமூர்த்தி, 41; இவர், நேற்று முன்தினம் இரவு, 9:25 மணிக்கு, லளிகத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சில் முன் படிக்கட்டில் ஏற முயன்றார். அப்போது தவறி விழுந்ததில், பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வடமாநில தொழிலாளி பலி
ஓசூர்: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராமசிங் சவுகான், 42; தளி அருகே உப்பாரப்பள்ளியில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த, 4ல் இரவு, தளி - ஓசூர் சாலையில் நடந்து சென்றவர் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இறந்தார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.
பைக்கிலிருந்து விழுந்த பெண் சாவு
அரூர்: அரூர் அடுத்த வேப்பநத்தத்தை
சேர்ந்த வடிவேல் மனைவி வசந்தா, 47; இவர், நேற்று முன்தினம் வீரப்பநாயக்கன்பட்டியிலுள்ள தன் மகள் ஜெயலட்சுமி வீட்டுக்கு சென்றுள்ளார். பின், இரவு, 7:30 மணிக்கு தன் சகோதரர் வீரமணியுடன் ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில்
ஊர் திரும்பினார். மாம்பாடி பாலம் அருகே வேகத்தடையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த
வசந்தா, சம்பவ இடத்திலேயே இறந்தார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இருசக்கர வாகனம் திருட்டு
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியை சேர்ந்தவர் மாதேஷ், 26; இவர் கடந்த, ஜூன், 29ல், தன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த யமஹா பைக் திருடு போனது. நேற்று முன்தினம் மாதேஷ் அளித்த புகார்படி கந்திக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
குட்கா விற்றவர் கைது
கிருஷ்ணகிரி: பர்கூர் போலீசார் நேற்று முன்தினம் பர்கூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற, அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், 41,
என்பவரை கைது செய்தனர்.
16 வயது சிறுமி மாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டையை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. கடந்த, 3ல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
லாட்டரி விற்றவர் சிக்கினார்
ஓசூர்: கெலமங்கலம் ஸ்டேஷன் எஸ்.ஐ., கார்த்திகேயன் மற்றும் போலீசார், உழவர் சந்தை பகுதியில் லாட்டரி விற்ற, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தீர்த்தகிரி நகரை சேர்ந்த செல்வம், 57, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 150 லாட்டரி சீட்டுகள் மற்றும் 1,200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இளம்பெண்கள் மாயம்
மொரப்பூர்: மொரப்பூர் அடுத்த எம்.தொட்டம்பட்டியை சேர்ந்த, 21 வயதுடைய பெண், நேற்று முன்தினம் இரவு, 1:00 மணிக்கு வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகார்படி, மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஓசூர் அருகே பேகேப்பள்ளியை சேர்ந்தவர் வில்சன்ராஜ் மனைவி பிரியா, 30; கடந்த, 29ல் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
அவரது கணவர் புகார்படி, சிப்காட் போலீசார்
வழக்குப்பதிந்து பிரியாவை தேடி வருகின்றனர்.
ஒரு டன் கரும்பிற்கு ரூ.5,000
வழங்க விவசாயிகள் கோரிக்கை
அரூர், டிச. 7-
அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவை துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. ஒரு டன் கரும்பிற்கு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
உரம், யூரியா விலை உயர்வு, பராமரிப்பு செலவு உள்ளிட்டவைகளை, கணக்கில் கொண்டு ஒரு டன் கரும்பிற்கு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். வெட்டுக்
கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும். சிறு வயல்களிலும் இயந்திரம் மூலம், கரும்பு அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள இணைமின் நிலையம் அமைக்கும் பணியை துவங்க வேண்டும். இணைமின் நிலையம் அமைக்க, 7,182 விவசாயிகளிடம் இருந்து பிடித்தம் செய்த, 4.2 கோடி ரூபாயை திரும்ப வழங்க வேண்டும். கரும்பு மானிய சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நிறைவேற்றப்பட வேண்டிய
பணிகள் குறித்து ஆலோசனை
கிருஷ்ணகிரி, டிச. 7-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்திலுள்ள, ஆறு
சட்டசபை தொகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில், உங்கள் தொகுதியில்
முதலமைச்சர் திட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட, 10 கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வேப்பனஹள்ளி முனுசாமி, கிருஷ்ணகிரி அசோக்குமார், ஊத்தங்கரை தமிழ்செல்வம், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், இ.கம்யூ., - எம்.எல்.ஏ., தளி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ஓசூர், டிச. 7-
கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளியில், கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து, அ.தி.மு.க., சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழகத்தில், சொத்து வரி, மின்கட்டணம், பால் மற்றும் விலைவாசி உயர்வு, சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தை பொறுத்தவரை வரும், 9ல், கெலமங்கலம் தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்.,க்கள், 13ல், ஓசூர் மாநகராட்சி மற்றும் 14ல் ஒன்றிய பகுதிகளில், அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடக்க உள்ளன.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்.,க்கள் மற்றும் தளி வடக்கு ஒன்றிய பகுதியில், கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணை
செயலாளர் மதன், எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் சந்திரன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
2 மின் விசிறிகளை
திருடிய 2 பேர் கைது
கிருஷ்ணகிரி, டிச. 7-
காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் முத்து, 48; கட்டட தொழிலாளி. இவர் கடந்த, 5ல், காவேரிப்பட்டணம் ஹவுசிங் போர்டு பகுதியில், வைத்துச்சென்ற, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சென்ட்ரிங் ஷீட்டுகள் மற்றும் 2 மின் விசிறிகள் திருடு போனது. அவர், காவேரிப்பட்டணம் போலீசில் புகாரளித்தார். அதன்படி போலீசார், காவேரிப்பட்டணம் கருக்கன்சாவடி இந்திரா நகரை சேர்ந்த பாரதி, 47, பூங்காவனம், 36 ஆகியோரை கைது செய்தனர்.