தர்மபுரி, டிச. 7-
தர்மபுரி நகர் மன்ற கூட்டம், தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா கூட்டரங்கில் நேற்று மாலை நடந்தது. நகராட்சி, தி.மு.க., சேர்மன் லட்சுமிமாது தலைமை வகித்தார். தர்மபுரி நகராட்சி
கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 18 தி.மு.க., கவுன்சிலர்களில், மூன்று பேரும், கூட்டணி கட்சியான வி.சி, கவுன்சிலர் என, நான்கு பேர் மட்டும் பங்கேற்றனர். 15 தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை. அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 13 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், மொத்தம், 51 தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அப்போது, பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ராஜாத்திரவி,
செந்தில்வேல், மாதேஷ், முன்னா, தண்டபாணி ஆகியோர், நகராட்சி பகுதியில் எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளப்படவில்லை. குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, குப்பை அகற்றம் உள்ளிட்ட எந்தப்பணியும் முறையாக செய்யப்படுவதில்லை. கேட்டால் ஆட்கள் பற்றாக்குறை என சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் தேவைக்கு மட்டும் பணிகளை மேற்கொண்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என
தீர்மானம் வைக்கிறீர்கள்.
குறிப்பாக, வார்டு சபா கூட்டம் நடத்த ஜமக்காளம், பேனா, குறிப்பேடு ஆகியவை, ஐந்து லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் இப
்பொருட்கள் கிடைக்கும்போது அதிக விலைக்கு இவை வாங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு பணிகளுக்கு கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இன்று கொண்டு வந்துள்ள, 51 தீர்மானங்களையும் நாங்கள் நிராகரிக்கிறோம். இன்றைய கூட்டத்தில், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தான் மெஜாரிட்டியாக உள்ளோம். எனவே, இந்த
தீர்மானங்கள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடாது, என்றனர்.
அப்போது, நகராட்சி கமிஷன் சித்ரா, தர்மபுரி நகராட்சியின் வளர்ச்சிக்கும், அவசர தேவைக்கும் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு, கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு கொடுக்கா விட்டால் எப்படி பணிகளை நிறைவேற்ற முடியும். எனவே, தீர்மானங்களை நிறைவேற்றி தர வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.
ஆனால், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் தீர்மானங்களை நிராகரித்ததை அடுத்து, நேற்று நகராட்சியில் கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.