கிருஷ்ணகிரி, டிச. 7-
குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்கக்கோரி, காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப் பஞ்.,க்கு உட்பட்ட வெள்ளரம்பட்டியை சேர்ந்த மக்கள், காலி குடங்களுடன் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு போதுமான குடிநீர் இல்லை. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வருவதில்லை. இப்பகுதியில் உப்பு நீர் மட்டுமே வருகிறது. இப்பகுதி குடிநீர் பிரச்னையை தீர்க்க, ஜெகதாப் பஞ்.,க்கு உட்பட்ட வெள்ளரம்பட்டியில் வார்டு உறுப்பினர் நிதியிலிருந்து, ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆழ்துளை கிணறு பணிகள் நடந்தபோது, கொட்டாவூர், ஆத்தோரன்கொட்டாய் சுற்றுவட்டார பகுதி ஊர் கவுண்டர்கள் எங்களை தடுக்கின்றனர். அவர்கள் பகுதிகளில், அரசு அனுமதி இல்லாமல் பாப்பனேரி, கொட்டாவூர் ஏரி, மலைச்சனுார் ஏரி, அம்மன் ஏரி உள்ளிட்டவைகளில் ஏலம் விடப்பட்டதை, எங்கள் கிராமத்தினர் அரசு கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதை மனதில் வைத்து, தற்போது ஆழ்துளை கிணறு அமைக்க விடாமல் எங்களை, அவர்கள் தடுக்கின்றனர். புளோரைடு பிரச்னையால் எலும்பு, தோல் நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், எங்கள் பகுதி குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு, பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.