கிருஷ்ணகிரி, டிச. 7-
''உழைப்பவர்களுக்கு வீடு தேடி பதவி வரும்,'' என கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தடரஹள்ளி நாகராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளரும், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளருமான செங்குட்டுவன் பேசுகையில், ''மாவட்ட செயலாளர் பொறுப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டவுடன், நான் வேறு கட்சியில் இணைவேன் என சிலர் பேசினர். என் புகைப்படம் இல்லாமல் பேனர் அடித்து என் வீட்டு வாசலில் ஒட்டினர்.
தற்போது நமக்குள் மோதுவது முக்கியமல்ல. அ.தி.மு.க., விரைவில் ஒன்றாகி விடும். பா.ஜ., கூட்டணியுடன் சேர்ந்து, தேர்தலில் நம்மை எதிர்கொள்ளும். அவர்களை நாம் எதிர்கொள்ளவேண்டும். அதுதான் முக்கியம்,'' என்றார்.
தொடர்ந்து, மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
செயற்குழு கூட்டத்தில் அனைவரும் பதவி வேண்டும் என்கிறீர்கள். பதவியை பொறுப்பாக நினைத்து பணியாற்ற வேண்டும். நீங்கள் செய்யும் கட்சி பணிகளை பார்த்து, உங்கள் பதவிகள் வீடு தேடி வரும். அதற்கு நீங்கள் பொருளாதார செலவு செய்ய தேவையில்லை. கட்சிக்காக உழைத்தாலே போதும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட துணைச்செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.