கிருஷ்ணகிரி, டிச. 7-
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.
தமிழக அரசு உயர்த்திய பல்வேறு கட்டணங்களை கண்டித்தும், உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், வரும், 9ல் டவுன் பஞ்.,களிலும், 13ல் நகராட்சி, மாநகராட்சி பகுதியிலும், 14ல் அனைத்து ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜி 20 மாநாட்டில்,
அ.தி.மு.க., சார்பில் இடைக்கால பொதுச்
செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமியை கலந்து கொள்ள அழைப்பு விடுத்த
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட இணைச்செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.