ஈரோடு, டிச. 7--
ஈரோட்டில் முதல் முறையாக, அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில், ஒரே நாளில் இரண்டு நோயாளிகளுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்யப்பட்டது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரை சேர்ந்த ஒரு நோயாளிக்கு, கல்லீரல் தானம் வேண்டி, ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை சார்பில் பதிவு செய்திருந்தார்.
அவருக்கு, தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று ஆணையத்திலிருந்து, கல்லீரல் தானமாக பெற தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கோவையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம், ஒரு மணி நேரத்தில் கல்லீரல், ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.
அங்கு, அபிராமி கிட்னி கேர் நிர்வாக இயக்குனரும், சிறுநீரக சிறப்பு மருத்துவருமான டாக்டர் சரவணன் மற்றும் எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை டாக்டர் தியாகராஜன் தலைமையில், பாதிக்கப்பட்ட நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இதேபோல், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த, 25 வயது நபர் ஒருவருக்கும், டாக்டர் சரவணன் தலைமையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளும், ஒரே நாளில் செய்யப்பட்டதாகவும், இருவரும் நலமாக உள்ளதாகவும், மேலும், ஈரோட்டில் முதல் முறையாக, கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் செய்யப்பட்டதாக, டாக்டர் சரவணன் தெரிவித்தார்.