தாராபுரம், டிச. 7-
தாராபுரம், கவுண்டச்சிபுதுார் ஊராட்சி மன்ற கூட்டம், நேற்று காலை, 11:00 மணியளவில் தொடங்கியது. அப்போது, குடிநீர் பிரச்னை மற்றும் கட்டட அனுமதி பெற லஞ்சம் உள்ளிட்ட புகார்களை கூறி, 7 உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஊராட்சிமன்ற தலைவி செல்வி, வெளியேறினார். தகவலறிந்து அங்கு வந்த பி.டி.ஓ., ஜீவானந்தம், ஊராட்சி மன்ற தலைவி செல்வி மற்றும் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, பி.டி.ஓ., மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஊராட்சி மன்ற பிரச்னை குறித்து, பலமுறை புகாரளித்தும், இதுவரை ஏன் பதில் இல்லை என கேட்ட உறுப்பினர்கள், உரிய பதில் கிடைக்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக கூறியதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவி செல்வி மற்றும் உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், 'உறுப்பினர்கள் என்னை பணி செய்ய விட மாட்டேன் என்கிறார்கள்' எனக் கூறி, அழுதபடியே வெளியே வந்த செல்வி, அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த இரு தரப்பினரின் போராட்டம், இரவு வரை நீடித்தது.
இரவு, 9:00 மணியளவில், தாசில்தார் ஜெகஜோதி அங்கு வந்து, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சம்பவத்தால், நேற்று கவுண்டச்சிபுதுார் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில், பரபரப்பு ஏற்பட்டது.