தி.மு.க., ஆலோசனை கூட்டம்
குளித்தலை, டிச. 7-
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, குளித்தலையில் தி.மு.க., சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்து, கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். இதில் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன், வாக்குச்சாவடி முகவர்கள், கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
த.மு.மு.க., சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர், டிச. 7-
கரூர் மாவட்ட த.மு.மு.க., சார்பில், தலைவர் பக்ருதீன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த, 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், கரூர் மேற்கு மாவட்ட வி.சி.க., செயலாளர் ஜெயராமன், பார்வர்டு பிளாக் கட்சி செயலாளர் சம்பத், மனித நேய மக்கள் கட்சி செயலாளர் ஷேக் முகமது, த.மு.மு.க., பிரதிநிதி ஹாரூன் ரசீத் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், கரூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ., சார்பில், தலைவர் முகமது அலி ஜின்னா தலைமையில், தபால்-தந்தி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சாமானிய மக்கள் நலக்கட்சி பொதுச்செயலாளர் குணசேரகன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட தலைவர் பொன்னுசாமி, எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிகள் பாஷா, நிசார்கான், ஜாபர் சாதிக் அலி உள்பட பலர் பங்கேற்றனர்.
11ல் மாநில அளவிலான
செஸ் போட்டி
கரூர், டிச. 7-
கரூரில் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி வரும், 11ம் தேதி நடக்கிறது என, ஆனந்த் செஸ் அகாடமி செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர், சின்ன ஆண்டாங்கோவில், ஸ்ரீ சங்கர வித்யாலயா சீனியர் பள்ளியில், மாநில அளவிலான செஸ் போட்டி வரும் 11ம் தேதி, காலை 9:00 மணிக்கு நடக்கிறது. இதில், சிறுவர் மற்றும் பெரியவர்கள் பங்கேற்கலாம்.
போட்டியில், வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் வரும், 9ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு 97879 - 60669 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது-.
ரூ.1.79 லட்சத்துக்கு
நிலக்கடலை ஏலம்
கரூர், டிச. 7-
கரூர், க.பரமத்தி பகுதிகளில் விளையும் நிலக்கடலையை, சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். நேற்-று முன்தினம் நடந்த ஏலத்தில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 77 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.68.50, அதிகபட்ச விலையாக, ரூ.76.20, சராசரி விலையாக ரூ.74.60க்கு ஏலம் போனது. மொத்தம், 2,424 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 1 லட்சத்து 79 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனையானது.
தேங்கிய குப்பை
பொதுமக்கள் கடும் அவதி
கரூர், டிச. 7-
கரூர் அருகே வெண்ணைமலையில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், வீடுகள், கரூர் பஞ்., யூனியன் அலுவலகம், வேலை வாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் நலத் துறை அலுவலகம் ஆகியவை உள்ளன. ஆனால், பொதுமக்கள் குப்பையை கொட்ட, தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால், சாலையில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. காற்று பலமாக வீசும்போது குப்பை பறந்து ஆங்காங்கே சிதறுகின்றன. மேலும், அந்த பகுதியில் உலா வரும் நாய்கள், குப்பையை கிளறி சாலை நடுவே இழுத்து போட்டு விடுகின்றன. எனவே வெண்ணைமலை பகுதியில் குப்பையை அகற்ற, காதப்பாறை பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதாள சாக்கடை மூடிகளை
மாற்ற வலியுறுத்தல்
கரூர், டிச. 7-
கரூர் நகரில் கோவை சாலையில், பிளாட்பாரங்கள் மீது, பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த மூடிகள்
சேதமடைந்துள்ளன. அதில் உள்ள, கான்கிரீட் இரும்பு கம்பிகள், சில
இடங்களில் நீட்டிய நிலையில் உள்ளன. இதனால், பிளாட்பாரத்தில்
நடந்து செல்லும் பொதுமக்கள், பெரும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் நடந்து செல்லும், பொதுமக்களின் கால்களை, இரும்பு கம்பிகள் பதம் பார்க்கிறது. எனவே, கரூர் - கோவை சாலையில் சேதமடைந்துள்ள சிமென்ட் மூடிகளை, உடனடியாக
மாற்ற வேண்டும்.
கழிவுநீர் தேங்குவதால்
சுகாதார சீர்கேடு
கரூர், டிச. 7-
கரூர் அருகே, வாங்கல் சாலை பிரிவு பகுதியில் சாக்கடை கால்வாயில், குப்பை, கழிவுகள் தேங்கி, செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் சாலையில் செல்லும் நிலை உள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள் இரவு நேரத்தில், துாங்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, சாக்கடை கால்வாயில் உள்ள முட்புதர்கள், கழிவுகளை உடனடியாக அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாட்டரி விற்ற 3 பேர் கைது
குளித்தலை, டிச. 7-
தோகைமலை பஸ் ஸ்டாப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பஸ் ஸ்டாண்டு பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெள்ளை சீட்டில் எண்கள் எழுதி, பொதுமக்களிடம் லாட்டரி விற்பனை செய்ததாக தோகைமலையை சேர்ந்த ஆறுமுகம், 59, தோகைமலை வடக்கு தெருவை சேர்ந்த மோகன்ராஜ், 40, கூடலுார் பஞ்., ராக்கம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி, 46, ஆகிய மூவரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.
ஆதரவின்றி சுற்றி திரிந்த 19 பேர் மீட்பு
கரூர், டிச. ௭-
கரூர் மாவட்டத்தில் வசிப்பிடம், ஆதரவின்றி சுற்றி திரிந்த 19 பேரை போலீசார் மீட்டனர்.
கரூர், குளித்தலை பகுதிகளில் கோவில், பஸ் ஸ்டாண்ட், சாலையோரம் தங்கி யாசகம் பெற்று சுற்றிக்கொண்டிருந்த, 19 பேரை போலீசார் நேற்று மீட்டனர். அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு, தனியார் காப்பகங்களில் சேர்க்கப்பட்டனர்.
ஆதரவின்றி உள்ள நபர்களை பிச்சை எடுக்க வைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், யாராவது செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.