கிருஷ்ணராயபுரம், டிச. 7 -
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,ல் கழிவு நீர் வடிகால், பேவர் பிளாக் சாலை பணி தரமற்ற முறையில் நடப்பது குறித்து காலைக்கதிரில் செய்தி வெளியானதை தொடர்ந்து, தரமற்ற வடிகால் அகற்றப்பட்டு புதிதாக வடிகால் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., 5 வது வார்டுக்கு உட்பட்ட மஞ்சமேடு மணி நகர் பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவு நீர் வடிகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகள் தமதமாகவும், தரமற்ற முறையிலும் மேற்கொள்ளப்பட்டன. இதனால், சமீபத்தில் கழிவுநீர் வடிகால் சுவர் உடைந்து சேதமடைந்தன. மேலும், வடிகாலில் கழிவுநீர் செல்ல முடியாத வகையில் கோணல் மாணலாக கட்டப்பட்டது. ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் பணிகளை மேற்கொள்வதாகவும், சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இந்நிலையில் ஒப்பந்ததாரரை கண்டித்து நேற்று காலை, மா.கம்யூ., கட்சியினர், அப்பகுதி மக்கள் இணைந்து, டவுன் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் டவுன் பஞ்., செயல் அலுவலர் யுவராணி, பஞ்., தலைவர் சேதுமணி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், மாயனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், உதவி செயற்பொறியாளரை கொண்டு ஆய்வு செய்து, அதே ஒப்பந்ததாரரை கொண்டே தரமான முறையில் கழிவுநீர் வடிகால், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணி நகரில் சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு ரூ.38,330 கட்டணம், மின்சார வாரியத்துக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது. விரைவில் மின்கம்பம் மாற்றி அமைக்கப்படும். மூன்று மாத காலத்துக்குள் இப்பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும். பணி முடிந்த பிறகு ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே ஒப்பந்ததாரருக்கு அதற்கான தொகை விடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ஏற்கனவே இரண்டு முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நேற்று மூன்றாவது முறையாக டவுன் பஞ்., நிர்வாகத்தினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, 5வது வார்டு, மஞ்சமேடு மணி நகரில் கோணல் மாணலாக கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய் சுவர் உடனடியாக அகற்றப்பட்டது. பின்னர் தொழிலாளர்களை கொண்டு புதிதாக வடிகால் கட்டும் பணி துவங்கியது.