கரூர், டிச. 7-
கரூர் மாநகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் துாய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பெரும்பாலானோர் கேன்களில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இத்தொழிலில் உரிமம் பெற்று முறையாக இயங்குபவர்களை விட, விதிகளை பின்பற்றாமல் போலியாக செயல்படுபவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். கரூரில் ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற குடிநீர் விற்பனையில் 9க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் தரமற்ற நீர் விற்பனை சத்தமின்றி நடந்து வருகிறது.
இது குறித்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
'ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்' எனப்படும் ஆர்.ஓ., முறையில் நீரை சுத்திகரிக்கும்போது, தண்ணீரில் பாக்டீரியா, உலோகம், உப்புகள் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ., முத்திரை தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். இதற்கு உரிமக்கட்டணம், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி பெற வேண்டும். 'லேப்' அமைக்க மற்றும் டெக்னீஷியனுக்கு ஊதியம் போன்றவற்றுக்கு ஒரு நிறுவனத்துக்கு குறைந்தபட்சம், மாதம் 10 லட்சம் ரூபாய் செலவாகிறது.
ஆனால் போலி நிறுவனங்கள், விதிகளை பின்பற்றாமல் ஆர்.ஓ., பிளான்ட் அமைத்து தண்ணீரை சுத்தம் செய்கின்றன. அதன் பிறகு குடிநீரை எந்த பரிசோதனையும் செய்யாமல், கேனில் அடைத்து விற்பனை செய்கின்றன.
மேலும் சில நிறுவனங்களில் கேன் கொண்டு சென்றால் குறைந்த விலையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்கின்றனர். கேன்களை முழுமையாக சுத்தம் செய்யாமல் குடிநீர் நிரப்புவதால் கிருமிகள் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. இந்த நீரை குடிக்கும்போது, நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எனவே, கரூர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கும் நிறுவனங்கள் முறையாக உரிமம் பெற்று, பாதுகாப்பான குடிநீரை வினியோகிக்கின்றனவா என, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.